சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அந்தமான் தீவுகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் – இஸ்ரோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 5:05PM by PIB Chennai

ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதுச்சேரி பல்கலைக்கழகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) கீழ் இயங்கும் தேசிய தொலை உணர்வு மையத்தின் (NRSC) ஒரு பகுதியான, கொல்கத்தாவில் உள்ள பிராந்திய தொலையுணர்வு மையம் - கிழக்கு (RRSC-East) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல்வேறு அதிர்வெண் கொண்ட தரவுகள், ஒளியியல் தரவுகள் மற்றும் தரைவழி அளவீடுகளைப் பயன்படுத்தி அந்தமான் சதுப்புநிலக் காடுகளை வகைப்படுத்துதல் என்ற தலைப்பிலான, ரூ. 54.03 லட்சம் மதிப்பிலான மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கூட்டு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. ஆர். குணசேகரன் மற்றும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் இணை முதன்மை ஆய்வாளருமான (Co-PI) முனைவர் டி. கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு காணொளி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றார். பிராந்திய தொலையுணர்வு மையத்தின் துணைப் பொது மேலாளர் அரிந்தம் குஹா பேசுகையில், இரு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான கூட்டாண்மையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பிராந்திய தொலையுணர்வு மையத்தின் விஞ்ஞானியும், இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான தனுமி குமார், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், இலக்குகள் மற்றும் இரு நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் முடிவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய தொலையுணர்வு மையத்தின் இணை இயக்குநரும் தலைமைப் பொது மேலாளருமான எஸ்.கே. ஸ்ரீவஸ்தவா, இந்த முக்கியமான ஆராய்ச்சி கூட்டாண்மையைத் தொடங்கியதற்காக இரு நிறுவனங்களையும் பாராட்டினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சதுப்புநிலக் காடுகள் (mangroves), கார்பனைச் சேமிப்பதிலும், சூறாவளி மற்றும் கடல் சீற்றங்களிலிருந்து கடற்கரையைப் பாதுகாப்பதிலும், மேலும் பல சூழலியல் சேவைகளை வழங்குவதிலும் வகிக்கும் முக்கிய பங்கினை வலியுறுத்தினார். கள ஆய்வுகள் மற்றும் ஆய்வகப் பகுப்பாய்வுகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு, அந்தமானில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கடல் ஆய்வுகள் மற்றும் கடல் உயிரியல் துறை மூலம் முழுமையான நிறுவன ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். பிராந்திய தொலையுணர்வு மைய துணை இயக்குநர் திருமதி அபர்ணா என்., அந்தமான் சதுப்புநிலங்கள் குறித்த ஆய்வின் முக்கிய இலக்குகளை எடுத்துரைத்தார். இயக்குநர் பிரகாஷ் சவுகான், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மூலோபாய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

***

TV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338551) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English