சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் பிஐஎஸ் சோதனை

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 10:00PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், 18 நவம்பர் 2026 அன்று, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் கிராமம், திருவேற்காடு சாலை, 409/1 A-4 என்ற முகவரியில் அமைந்துள்ள டைம் பேக்கேஜ்டு குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பேக்கேஜ்டு குடிநீர் கொள்கலன்கள் மற்றும் அவற்றின் லேபிள்களில் BIS தரநிலை முத்திரையை (ISI Mark) அங்கீகாரமின்றிப் பயன்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை, இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் பிரிவு 17(3)-ஐ மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, அச்சட்டத்தின் பிரிவு 28-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது, ISI முத்திரை பொறிக்கப்பட்ட 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 113 நிரப்பப்பட்ட PET ஜார்கள் (தண்ணீர் கேன்கள்), சுமார் 1,600 ISI முத்திரை கொண்ட லேபிள்கள் / ஒட்டுச்சீட்டுகள் மற்றும் 103 காலியான 20 லிட்டர் PET ஜார்கள் (தண்ணீர் கேன்கள்) பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இந்திய தரநிலை IS 14543-ஐக் குறிப்பிட்டு, BIS தரநிலை முத்திரை (ISI Mark) மற்றும் BIS உரிம எண் CM/L-0006458380 ஆகியவை அங்கீகாரமின்றிப் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட தயாரிப்பிற்காக BIS அமைவனத்திடமிருந்து செல்லுபடியாகும் உரிமம் பெறாமல் தரநிலை முத்திரையைப் பயன்படுத்துவது, BIS சட்டம், 2016-ன் பிரிவு 17(3)-ஐ மீறுவதாகும்.

BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் அவர்கள் தெரிவித்ததாவது, தற்போதைய ஒழுங்குமுறை நடைமுறைகளின்படி, பேக்கேஜ்டு குடிநீருக்கு BIS சான்றிதழ் கட்டாயமில்லை. இருப்பினும், தங்களது தயாரிப்புகளில் BIS தரநிலை முத்திரையை (ISI Mark) பயன்படுத்த விரும்பும் எந்தவொரு உற்பத்தியாளரும் அல்லது வணிக நிறுவனமும், சம்பந்தப்பட்ட தயாரிப்பிற்காக BIS அமைவனத்திடமிருந்து செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், உரிமத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே அந்த முத்திரையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ISI முத்திரையானது சம்பந்தப்பட்ட இந்தியத் தரநிலைக்கு இணங்குவதைக் குறிக்கிறது என்றும், BIS அமைவனத்தின் உரிய அங்கீகாரமின்றி அதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். அங்கீகாரமற்ற பயன்பாடு நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதுடன், BIS சான்றிதழ் மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசால் வகுக்கப்பட்டுள்ள பொருந்தக்கூடிய விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வணிக நிறுவனங்கள் சட்டப்பூர்வமான மற்றும் பொறுப்பான முறையில் தங்களது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தயாரிப்புகள் தொடர்பான விவரங்கள் மற்றும் சான்றிதழ் குறித்த அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒழுங்குமுறை விதிமீறல்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வணிக நிறுவனங்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, சட்டத்திற்கு உட்பட்டு தங்களது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக BIS தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். BIS தரநிலை முத்திரையை அங்கீகாரமின்றிப் பயன்படுத்துவது, அச்சட்டத்தின் பிரிவு 29(3)-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி, குற்றத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், வழக்குத் தொடருதல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

BIS சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தயாரிப்புகளை நம்புவதற்கு முன்பாக, அவற்றில் உள்ள BIS தரநிலை முத்திரை மற்றும் அதற்குரிய உரிம விவரங்களின் உண்மைத்தன்மையை நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு தயாரிப்பு அல்லது அதன் பொட்டலத்தில் ISI முத்திரை அல்லது உரிம எண் இருப்பதை மட்டும் வைத்து, அது செல்லுபடியாகும் BIS சான்றிதழைப் பெற்ற தயாரிப்பு எனக் கருதக்கூடாது. இந்த விவரங்களை BIS Care செயலி அல்லது BIS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bis.gov.in மூலம் சரிபார்க்கலாம். BIS தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான புகார்களை BIS Care செயலி மூலமாகவோ அல்லது BIS சென்னை கிளை அலுவலகத்தின் cnbo@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கலாம்.

***

SK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338210) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English