சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சித்த மருத்துவர்களுக்கான நூல் வடிவமைப்பு குறித்த மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையை நடத்தும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 9:16PM by PIB Chennai

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (Central Council for Research in Siddha –CCRS), சென்னை,  சித்த மருத்துவர்களின் நூல் வடிவமைப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் வெளியீட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 2026 நவம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது.

சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் பிற அறிவுசார் ஆவணங்களைத் தரமான முறையில் வடிவமைத்து வெளியிடுவதற்குத் தேவையான அடிப்படை கிராஃபிக் வடிவமைப்புத் திறன்கள் மற்றும் கணினி வழி வெளியீட்டுத் தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சித்த மருத்துவர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் சித்த மருத்துவ அறிவைப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தி, முறையாக வடிவமைக்கப்பட்ட வெளியீடுகள் வாயிலாகப் பரப்புவதற்கான திறன்களைப் பெறுவர்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சித்தர் வணக்கத்துடன் தொடங்கிய இப்பட்டறையின் தொடக்க விழாவில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் மூத்த அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்துகொண்டனர். டாக்டர் ஆர். மாணிக்கவாசகம், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா), விஞ்ஞானி – II வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, டாக்டர் எஸ். செல்வராஜன், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா), விஞ்ஞானி – IV, DDO, CCRS, சிறப்புரை ஆற்றினார். மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். ஜே. முத்துக்குமார் அவர்கள் தலைமையுரை வழங்கினார். சித்த மருத்துவ ஆராய்ச்சியின் ஆவணப்படுத்தல் மற்றும் பரவலாக்கத்தில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தையும், சித்த மருத்துவ வல்லுநர்கள் நூல் வடிவமைப்பு மற்றும் வெளியீட்டுத் துறையில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில், கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் கணினி வழி நூல் வெளியீட்டிற்கான மூன்று முக்கிய மென்பொருட்களில் செய்முறைப் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் நாளில் கிராஃபிக் வடிவமைப்பின் அடிப்படைகள் மற்றும் CorelDRAW மென்பொருள் பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளில் Adobe Photoshop மென்பொருள் மூலம் படங்களைத் திருத்துதல், மேம்படுத்துதல் மற்றும் வெளியீடுகளுக்குத் தேவையான காட்சிப் பொருட்களை உருவாக்குதல் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. மூன்றாம் நாளில் PageMaker மென்பொருளைப் பயன்படுத்தி பக்க வடிவமைப்பு, உரை சீரமைப்பு மற்றும் நூல் வெளியீட்டிற்கான ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவை குறித்த செய்முறைப் பயிற்சி நடைபெறுகிறது.

இப்பயிற்சிப் பட்டறையின் தொழில்நுட்ப அமர்வுகளை டிஜிட்டல் ஊடகத் துறையில் அனுபவம் பெற்ற திரு. சதீஷ், நிறுவனர் சேயோன் டெக் டிஜிட்டல் மீடியா சொல்யூஷன்ஸ், மற்றும் திரு. அசோக் குமார், பயிற்றுநர்(Trainer) ஆகியோர் வழிநடத்துகின்றனர். பங்கேற்பாளர்கள் இம்மென்பொருட்களைப் பயன்படுத்தி நூல் வடிவமைப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்குகின்றனர்.

இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம், சித்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் டிஜிட்டல் வடிவமைப்பு மற்றும் நூல் வெளியீட்டுத் திறன்களை மேம்படுத்துவதுடன், தரமான சித்த மருத்துவ நூல்கள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை உருவாக்குவதையும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சித்த மருத்துவ அறிவைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல், ஆராய்ச்சி முடிவுகளைப் பரவலாக்குதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மேலும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் குழுமத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இப்பட்டறை ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைகிறது.

***

SK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338185) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English