PIB Backgrounder
azadi ka amrit mahotsav

2001 கட்ச் நிலநடுக்கம்

நெருக்கடியை திறம்பட எதிர்கொண்டு மீண்டெழுந்த குஜராத்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 11:34AM by PIB Chennai

2001 ஜனவரி 26 அன்று காலை 8.46 மணியளவில் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டு 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அம்மாநிலத்தின் நிர்வாகம், அதன் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. 181 வட்டங்களில் உள்ள சுமார் 7,633 கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 1 கோடி மக்கள் இத்துயரத்தால் பாதிக்கப்பட்டனர். கட்ச் பகுதியில் 12,221 பேர் உள்பட மொத்தம் 13,805 பேர் உயிரிழந்ததுடன், 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின; சுமார் 9 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. 10,000-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், 50,000 கைவினைக்கலைஞர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

தொலைத்தொடர்பு சேவைகள் ஒரு மணி நேரத்திற்குள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணிகளைத் தொடங்கினர். மத்திய அரசு அன்றைய தினமே ரூ.500 கோடி நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்கியது. மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 2001 பிப்ரவரி 8 அன்று முதலமைச்சர் தலைமையில் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன. ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களே தங்களது வீடுகளைத் தாங்களாகவே கட்டிக்கொள்ளும் வகையில் நிதியுதவி, தொழில்நுட்ப வழிகாட்டுதல், நிலநடுக்கத்தைத் தாங்கும் பாதுகாப்பான வடிவமைப்புகளை அரசு வழங்கியது.

புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதிகள் குறைதீர்ப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பெறப்பட்ட 47,156 மனுக்களில் 99% தீர்க்கப்பட்டன. 2001 அக்டோபரில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு நரேந்திர மோடி, மறுகட்டமைப்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்தினார். கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு 11 மூத்த செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, வார இறுதி நாட்களில் கள ஆய்வு மேற்கொள்ளவும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பயனாக 2004 ஜனவரிக்குள் சுமார் 1.87 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டன. 42,678 தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் பழுதுபார்க்கப்பட்டதுடன், 7,469 வகுப்பறைகள் மறுகட்டமைக்கப்பட்டன. பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் ரூ.114 கோடி செலவில் புஜ் மாவட்ட அரசு மருத்துவமனை நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது.

கட்ச் பகுதியில் புதிய தொழில்களை ஊக்குவிக்க வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் மூலம் 2004 மார்ச் மாதத்திற்குள் சுமார் ரூ.4,785 கோடி முதலீட்டில் 151 புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. பேரிடர் மேலாண்மைக்காக 2002-ம் ஆண்டில் மாநிலக் கொள்கை வகுக்கப்பட்டதோடு, 2003-ம் ஆண்டில் சட்டமும் இயற்றப்பட்டது. 484 கிராமங்களில் பேரிடர் தயார்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய சிறப்பான நிர்வாகத்திற்காக 2003-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சசகாவா விருதும், 2004-ம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்பின் தங்க விருதும் குஜராத்திற்கு வழங்கப்பட்டன. நெருக்கடியான தருணத்தில் விரைவான முடிவுகள், மக்கள் பங்களிப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவை மூலம் ஒரு பிராந்தியத்தையே மீட்டெடுக்க செய்ய முடியும் என்பதற்கு கட்ச் மறுகட்டமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336752&reg=3&lang=1

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2337048) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Bengali , Bengali-TR , English , Urdu , Gujarati