இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 2:52PM by PIB Chennai
2027-ம் ஆண்டு 16-வது மக்கள் தொகை இரண்டாம் கட்ட கணக்கெடுப்பிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியாளர்களுக்கான நான்கு நாள் உண்டு, உறைவிட பயிற்சித் திட்டம் தொடங்கியது. 2026 நவம்பர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள பயிற்சியில் தலா 40 பேரைக் கொண்ட மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 120 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 76 பேரும், தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தைச் சேர்ந்த 40 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக 2027 ஜனவரி 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 15 நாட்கள் டிஜிட்டல் சுய கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளரும் மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான திரு பி சந்திர மோகன், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தரவுத் துல்லியம், தகவல் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு, முழுமையான உள்ளடக்கம் ஆகிய மூன்று முக்கியத் தூண்கள் குறித்து வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரும் தலைமை முதன்மை கணக்கெடுப்பு அதிகாரியான திரு எம் சுந்தரேஷ் பாபு பேசிய போது, இது நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான ஒரு தனித்துவமிக்க பணி என்று குறிப்பிட்டதுடன், களத்தில் ஏற்படும் தகவல் தொடர்பு சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளுமாறு பயிற்சியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
***
SS/IR/SM/RJ