சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை புரசைவாக்கத்தில் அங்கீகாரமற்ற பிஐஎஸ் பதிவு குறியீடுகளுடன் கூடிய சுமார் 16,000 பேட்டரிகள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 8:20PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், 13 நவம்பர் 2026 அன்று, சென்னை புரசைவாக்கம், திருமலையப்பன் தெரு, எண் 28, தரைத்தளத்தில் அமைந்துள்ள அப்ரமாட் எண்டர்பிரைசஸ் என்ற பேட்டரிகளின் மொத்த விற்பனை மற்றும் விநியோக நிறுவனத்தில் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். BIS தரநிலை முத்திரையைச் செல்லுபடியாகும் உரிமம் / அங்கீகாரம் இன்றி தவறாகப் பயன்படுத்தியதுடன், இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை BIS சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையின்போது, “APRAMATT” என்ற பிராண்ட் பெயரில் BIS தரநிலை முத்திரை (CRS பதிவு முத்திரை) பொறிக்கப்பட்ட லித்தியம்-அயன் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை BIS அதிகாரிகள் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட தயாரிப்புகளுக்குச் செல்லுபடியாகும் BIS உரிமம் இன்றி பதிவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்ததால், BIS தரநிலை முத்திரை (பதிவு) தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது, சுமார் 16,000 லித்தியம்-அயன் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தயாரிப்புகள் இந்திய தரநிலை IS 16046 (Part 2):2018 / IEC 62133-2:2017-ன் கீழ் வருகின்றன. மேலும், BIS சட்டம், 2016-ன் பிரிவு 16-ன் கீழ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) அறிவிக்கப்பட்ட Electronics and Information Technology Goods (Requirement of Compulsory Registration) Order-ன் கீழ் கட்டாயப் பதிவு பெற வேண்டிய தயாரிப்புகளாகும். இந்தக் கட்டாயப் பதிவு திட்டத்தின் (Compulsory Registration Scheme – CRS) கீழ், பொருந்தக்கூடிய இந்தியத் தரநிலைகளுக்கு இணங்குவதும், சம்பந்தப்பட்ட தயாரிப்பிற்குச் செல்லுபடியாகும் BIS பதிவைப் பெற்றிருப்பதும் கட்டாயமாகும். உரிய அங்கீகாரமின்றி BIS பதிவு முத்திரைகளைப் பயன்படுத்துவதும், BIS தரநிலை முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டதுடன், BIS சட்டம், 2016-ன் கீழ் சட்ட விதிமீறலாகவும் அமைகிறது.

BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் அவர்கள் தெரிவித்ததாவது, BIS தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தவறான தயாரிப்பு அடையாளக் குறிப்புகளால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும் BIS தொடர்ந்து சந்தை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விற்பனை செய்யும் தயாரிப்புகள் உண்மையானவையாகவும், பொருந்தக்கூடிய இந்தியத் தரநிலைகள் மற்றும் கட்டாயச் சான்றிதழ் தேவைகளுக்கு இணங்கியவையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் முக்கியப் பொறுப்பு கொண்டுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார். வணிக நிறுவனங்கள் BIS பதிவு / உரிம விவரங்களின் உண்மைத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்ப்பதுடன், அந்த அங்கீகாரம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் பிராண்டிற்குப் பொருந்துகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், முறையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலமாக மட்டுமே தயாரிப்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வணிக நிறுவனங்கள் உரிய கவனத்துடன் செயல்பட்டு, தாங்கள் விற்பனை செய்யும் தயாரிப்புகள் பொருந்தக்கூடிய தரநிலைகள் மற்றும் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு தயாரிப்பு அல்லது அதன் பொட்டலத்தில் BIS தரநிலை முத்திரை அல்லது பதிவு எண் இருப்பதை மட்டும் நம்பி அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

BIS சட்டம், 2016 மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக BIS தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் BIS சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழான பறிமுதல் நடவடிக்கைகளின்படி கையாளப்பட்டுள்ளன. தொடர்புடைய பதிவு மற்றும் சான்றிதழ் விவரங்களைச் சரிபார்த்து, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் வழக்குத் தொடருதல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். BIS தரநிலை முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் BIS சட்டம், 2016-ன் பொருந்தக்கூடிய விதிமுறைகளை மீறுதல் ஆகியவை, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, அச்சட்டத்தின் பிரிவு 29-ன் கீழ் சிறைத்தண்டனை மற்றும் / அல்லது அபராதம் உள்ளிட்ட தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

கட்டாயச் சான்றிதழ் பெற வேண்டிய தயாரிப்புகளை வாங்கும்போது, அவற்றின் BIS தரநிலை முத்திரை (ISI Mark) மற்றும் பதிவு விவரங்களின் உண்மைத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டாயப் பதிவு திட்டத்தின் (CRS) கீழ் வரும் தயாரிப்புகளுக்கு, பதிவு எண் சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் பிராண்டிற்குப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவரங்களை BIS Care செயலி, BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS இணையதளம் www.manakonline.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்கலாம். BIS தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுதல் அல்லது உரிய சான்றிதழ் இன்றி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுதல் தொடர்பான புகார்களை BIS Care செயலி மூலமாகவோ அல்லது BIS சென்னை கிளை அலுவலகத்தின் cnbo@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கலாம்.

****

SK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336023) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English