பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கிமில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 3:08PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சிக்கிமில் உள்ள திரிசக்தி படைப்பிரிவின் (33-வது படைப்பிரிவு) வீரர்களுடன் இன்று (2026 நவம்பர் 8) தீபாவளியைக் கொண்டாடினார். அவருடன் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், கிழக்கு மண்டலத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி.எம்.பி. கிருஷ்ணன், 33வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மன் ராஜ் சிங் மான், இந்திய ராணுவத்தின் பிற மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஷெரதாங்கில் வீரர்களுடன் உரையாடியபோது, திரு ராஜ்நாத் சிங் அவர்களைத் தீபாவளியின் ஒளிமயமான விளக்குகள் என்று வர்ணித்தார். மேலும், எல்லைகளில் அவர்களின் அர்ப்பணிப்பும் விழிப்புணர்வும் ஒட்டுமொத்த தேசத்திற்கும்  பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது என்றும் கூறினார். இருளை அகற்றும் விளக்கைப்போல, வீரர்கள் தங்கள் கடமைகளை அமைதியாக ஆற்றி, மக்கள் பண்டிகைகளை அமைதியுடனும் பாதுகாப்படனும் கொண்டாட வழிவகை செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.

சவாலான, உயரமான மலைப்பகுதிச் சூழல்களிலும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் வீரர்கள் காட்டும் தொழில்முறைத் திறமை, உயர்ந்த மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை அமைச்சர் பாராட்டினார். மேலும், அதே உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் தாய்நாட்டைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு அவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார். சுயநலத்தையும் தனிப்பட்ட கொண்டாட்டங்களையும் விட, தேசத்திற்கான கடமைக்கு முன்னுரிமை அளித்து, தங்கள் குடும்பங்களிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றும் வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் கூறினார்.

ஒழுக்கம், துணிச்சல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், தொழில்நுட்பம் எவ்வளவுதான் முன்னேறினாலும், ஒரு வீரரிடம் இந்தக் குணங்கள் இல்லையென்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார். வீரர்களின் பண்புகள், நிதானம் ஆகியவை உள்ளூர் சமூகங்களிடையே ராணுவத்தின் பிம்பத்தை நல்ல முறையில் உருவாக்குகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஷெரதாங், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய ராணுவத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கையையும் நல்லெண்ணப் பிணைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வீரர்களைக் கேட்டுக்கொண்டார்.

தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு ஷெரதாங் போர் நினைவிடத்தில் அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் பாபா ஹர்பஜன் சிங் நினைவிடத்திற்குச் சென்று, அந்தப் போற்றத்தக்க வீரருக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார்.

ஷெரதாங் போர் நினைவிடத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், இதுபோன்ற நினைவுச்சின்னங்கள் கடந்தகால நிகழ்வுகளையும் தியாகங்களையும் நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், அவை, தேசிய உணர்வையும் பெருமிதத்தையும் தட்டி எழுப்புகின்றன என்று கூறினார். இந்த நினைவிடத்தில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள், நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த வீர நாயகர்கள், தங்கள் பிராந்தியம், மொழி அல்லது சமூகம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள் என்றும் அவர் கூறினார். இந்த ஒற்றுமை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் உணர்வே இந்தியாவின் ஆன்மா என்றும், இங்கு ஒவ்வொரு குடிமகனும் சக இந்தியர்களை ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகக் கருதுகின்றனர் என்றும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334114&reg=3

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334162) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Gujarati