PIB Backgrounder
azadi ka amrit mahotsav

குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியா பிரச்சாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 5:33PM by PIB Chennai

இந்தியாவில் குழந்தைத் திருமண முறையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள் இல்லாத இந்தியா என்ற தேசிய அளவிலான இயக்கம் 2 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வறிக்கை தரவுகளின்படி, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை தேசிய அளவில் கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இதனை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்காகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு, சமூகத்தின் கூட்டுப்பங்கேற்பு ஆகியவை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களை இந்த இயக்கம் சென்றடைந்துள்ளது.

பெண்களின் கல்வி, ஆரோக்கியம், எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கும் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2024 நவம்பர் 27 அன்று இந்தத் தேசிய இயக்கத்தைத் தொடங்கியது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை தரவுகளின்படி, 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமண விகிதம் கடந்த காலத்தில் 23.3 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த அளவு 20.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாட்டின் பல மாநிலங்கள் இந்த இலக்கை எட்டுவதில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளன. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, அஸ்ஸாம், பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ன் கீழ் இத்தகைய திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கிராமப் பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அளவில் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உரிய கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கென பிரத்யேகமான இணையதளம் உருவாக்கப்பட்டு புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய திருதியை போன்ற விசேஷ நாட்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகங்களும் காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தவும் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் இந்த இயக்கம் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், ஆன்மீகத் தலைவர்கள், கிராமப்புற அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைய தலைமுறையினர், பொதுமக்கள் அனைவரும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள சிறப்பு இணையதள முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவை முற்றிலும் குழந்தைத் திருமணமற்ற நாடாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333696&reg=3&lang=1   

****

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333823) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu