சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 9:19PM by PIB Chennai

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகம், ‘மானக் சம்வாத் – புதிய BIS உரிமம் பெற்றவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி’யை சென்னை தரமணியில் உள்ள BIS, C.I.T. வளாகத்தில் நடத்தியது. BIS சான்றளிப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், தொடர்புடைய இந்தியத் தரநிலைகள், உரிம நிபந்தனைகள் மற்றும் தரத் தேவைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 41 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி, திரு. S. D. தயானந்த், விஞ்ஞானி-F / முதுநிலை இயக்குநர் & தலைவர், BIS சென்னை கிளை அலுவலகம் அவர்களின் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்த உரையுடன் தொடங்கியது. புதிதாக BIS உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நாடு முழுவதும் தரம், பாதுகாப்பு மற்றும் தரநிலையாக்கத்தை மேம்படுத்துவதில் BIS ஆற்றிவரும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். இந்தியத் தரநிலைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து செயல் பங்காளர்களின், குறிப்பாக BIS உரிமம் பெற்றவர்களின், தீவிர ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். மேலும், தரநிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் தரமான தயாரிப்புகளை தொடர்ந்து உற்பத்தி செய்ய தொழில்துறையினரை ஊக்குவித்தார். BIS உரிமம் பெறுவதன் முக்கியத்துவம், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் மற்றும் சீரான தரத்தை தொடர்ந்து பராமரிப்பதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் BIS மற்றும் தொழில்துறையினரிடையே பயனுள்ள கலந்துரையாடலுக்கான தளமாக அமைவதுடன், சான்றளிப்பு மற்றும் இணக்க நடைமுறைகள் குறித்த புரிதலை மேம்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் அமர்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, சந்தேகங்களை எழுப்பி விளக்கங்களைப் பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

BIS உரிமத்தின் செயல்பாடு, BIS நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வின் மூலம் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்துறையின் பங்கு என்ற தலைப்பிலான தொழில்நுட்ப அமர்வை திரு. முனிநாராயணா R, விஞ்ஞானி-E / இயக்குநர், BIS சென்னை கிளை அலுவலகம் அவர்கள் நடத்தினார். இதில் BIS உரிமத்தின் செயல்பாடு, உரிமம் பெற்றவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், தரநிலை முத்திரையைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் (Surveillance) மற்றும் BIS சான்றளிப்புத் திட்டத்தின் கீழ் பின்பற்ற வேண்டிய பிற இணக்க நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்தியத் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் தொழில்துறையின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. BIS Care செயலி, புகார் தீர்வு நடைமுறை மற்றும் தரநிலை மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட BIS-ன் முக்கிய முயற்சிகள் மற்றும் சேவைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன் மூலம் BIS சேவைகளை திறம்பட பயன்படுத்திக் கொள்வதுடன், தரம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

 

மேலாண்மை அமைப்பு சான்றளிப்பு (Management System Certification – MSC) குறித்த பயிற்சி அமர்வு திரு. அபிஷேக் பத்துலா, இளம் தொழில்முறை நிபுணர் (Young Professional), மேலாண்மை அமைப்பு சான்றளிப்புத் துறை (MSCD), BIS அவர்களால் நடத்தப்பட்டது. இதில் BIS வழங்கும் IS/ISO 9001 (தர மேலாண்மை அமைப்பு), IS/ISO 14001 (சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு) மற்றும் IS/ISO 45001 (தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பு) உள்ளிட்ட பல்வேறு மேலாண்மை அமைப்பு சான்றளிப்புத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், செயல்முறைகளை தரநிலையாக்குதல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் இச்சான்றளிப்புகள் வழங்கும் நன்மைகள் குறித்தும், BIS வழங்கும் குறைக்கப்பட்ட சான்றளிப்புக் கட்டணங்கள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதிதாக BIS உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களுக்கு BIS உரிம ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் BIS சான்றளிப்பு அமைப்பில் முறையாக வரவேற்கப்பட்டதுடன், தரம் மற்றும் தொடர்புடைய இந்தியத் தரநிலைகளுக்கு இணங்க செயல்படுவதற்கான அவர்களது உறுதிப்பாடும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் (Open House) பங்கேற்பாளர்கள் BIS அதிகாரிகளுடன் கலந்துரையாடி, BIS சான்றளிப்பு, இணக்க நடைமுறைகள், தரநிலைகள் மற்றும் BIS-ன் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர்.

பங்கேற்பாளர்கள் தொடர்புடைய இந்தியத் தரநிலைகளுக்கு தொடர்ந்து இணங்க செயல்படுவதுடன், தரம், பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தும் BIS நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், நுகர்வோர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ISI முத்திரை, ஹால்மார்க் மற்றும் CRS பதிவுகளின் நம்பகத்தன்மையை BIS Care செயலி மற்றும் BIS இணையதளம் மூலம் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

****

SK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2333342) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English