தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 5:00PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நெட்வொர்க் நிறுவங்களுக்கான புதிய அங்கீகாரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தனது பரிந்துரைகளை இன்று வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை விரிவாக ஆய்வு செய்த பின்னர் டிராய் இப்பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது. தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ், இத்தகைய சேவை நிறுவனங்களுக்கு தேசிய அளவில் 20 ஆண்டு காலத்திற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் பெறும் நிறுவனங்கள், தகுதியான தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பை ஒரு சேவையாக மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். அதே சமயம், நுகர்வோருக்கு நேரடியாகத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க இயலாது. செயற்கைக்கோள் வழியாக நேரடியாகக் கைப்பேசி சாதனங்களை இணைக்கும் நவீன சேவைகளுக்கும், ஐஎம்டி அலைக்கற்றையைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கும் இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் அலைக்கற்றை 5 ஆண்டு காலத்திற்கு நிர்வாக அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதற்கான அங்கீகாரக் கட்டணம் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் 8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, இந்தியாவில் வலுவான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சூழலை உருவாக்கவும், தொலைதூரப் பகுதிகளுக்கு நவீன தகவல் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்தவும் உதவியாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333145®=3&lang=1
****
SK/PD/SH