இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 10:47AM by PIB Chennai
விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாக்கவும், சமச்சீரான உரப் பயன்பாட்டை உறுதி செய்யவும் விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் இயக்கம் 2026 என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை மத்திய அரசு 2026 அக்டோபர் 22 முதல் நவம்பர் 30 வரை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 46%-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு விவசாயம், அதுசார்ந்த துறைகளுமே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மண் வளம் குறைந்து வருவது, கட்டுப்பாடற்ற உரப் பயன்பாடு, விவசாயச் செலவுகள் அதிகரிப்பு போன்ற சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், இந்த இயக்கம் 34 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள், 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 50,000 கிராமங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, அதிகளவில் உரங்களைப் பயன்படுத்தும் 100 மாவட்டங்களில் சமச்சீரான ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2026 ஜூன் 1 முதல் 30 வரை நடத்தப்பட்ட முதற்கட்ட விழிப்புணர்வு இயக்கத்தில், 1.34 லட்சத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 1.07 கோடி விவசாயிகள் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வழியாக 4.5 கோடி மக்களும் பயனடைந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போதைய ரபி பருவத்திலும் இந்த இயக்கம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்ற ஊட்டச்சத்துகளைச் சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படுத்தும் கொள்கை, இயற்கை விவசாயம், பயிர்க் கழிவு மேலாண்மை, பயிர் சாகுபடிப் பன்முகத்தன்மை, தட்பவெப்ப நிலைக்கு உகந்த வேளாண்மை ஆகிய நடவடிக்கைகள் இந்த இயக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
மாநிலங்களின் வேளாண் துறைகள், விவசாயத் தொழில்நுட்ப மேலாண்மை அமைப்புகள், வேளாண் அறிவியல் நிலையங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தைச் செயல்படுத்துகின்றன. இதற்கென, 12,000-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள், அலுவலர்கள் அடங்கிய 4,150 களப்பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட செயல்முறை விளக்கங்களும், 11,750 விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தின் மூலம், நேரடிக் களப்பணி மூலமாக சுமார் 50 லட்சம் விவசாயிகளுக்கும், டிஜிட்டல் தளம் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மலை முருங்கை, பாசிப்பயறு ஆகிய பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் மண் வளத்தைப் பெருக்க முடியும் என விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர். ஒரு ஹெக்டேருக்கு 50 முதல் 60 கிலோ அளவு தழைச்சத்தை மலை முருங்கை வழங்குவதுடன், யூரியா உரப் பயன்பாட்டை 130 கிலோ வரை குறைக்கவும் உதவுகிறது. இதுபோன்ற நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பெண் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பலனடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், மண்வள அட்டைகள் வழங்குதல், பாதுகாப்பான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு ஆகியவை குறித்துத் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிரதமரின் கிசான் திட்டம், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், கிசான் கடன் அட்டை ஆகிய மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உரங்களுக்கான செலவைக் குறைத்து, சாகுபடித் திறனை உயர்த்தி, விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதில் விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் இயக்கம் 2026 முக்கியப் பங்காற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331385®=48&lang=1
***
SS/PD/SH