சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்ட பழங்குடியினர் மாணவர்களுக்காக ஜிக்யாசா பயிலரங்கத்தை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 12:23PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் (CSIR) கீழ் இயங்கும் சென்னையிலுள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC), மாணவர்–அறிவியலாளர் நேரடித் தொடர்பு (Student–Scientist Connect) திட்டத்தின் கீழ், 2026 அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளில் ஜிக்யாசா பயிலரங்கை நடத்தியது.

இப்பயிலரங்கு கீழ்காணும் பள்ளிகளில் நடைபெற்றது:

1. அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி (ஆண்கள் மற்றும் பெண்கள்), வாழவந்தி நாடு, கொல்லிமலை வட்டம்.

2. அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, செங்கரை, எடப்புளி நாடு, கொல்லிமலை வட்டம்.

3. அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி (ஆண்கள் மற்றும் பெண்கள் மாதிரிப் பள்ளி), திந்துப்பட்டி, சோளக்காடு, கொல்லிமலை வட்டம்.

4. அரசு மேல்நிலைப் பள்ளி, தெம்பளம், அரியூர் நாடு, கொல்லிமலை வட்டம்.

இப்பயிலரங்கில் சுமார் 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சிஎஸ்ஐஆர் அமைப்பால் ஜிக்யாசா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பயிலரங்கில், அறிவியல் உரைகள், நேரடி செயல்விளக்கங்கள் இடம்பெற்றன. நடைமுறைச் சோதனைகள் மூலம் அறிவியல் கோட்பாடுகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இவை அமைந்திருந்தன.

இப்பயிலரங்கில், நடைமுறைச் சோதனைகள் மூலம் அறிவியல் கோட்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நேரடிச் செயல்விளக்கங்களும் செயல்பாடுகளும் இடம்பெற்றன. இச்செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கோட்பாடுகளை அறிவியலாளர்கள் விளக்கினர். மேலும், கவனித்தல், கேள்விகள் எழுப்புதல், பரிசோதித்தல் மற்றும் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் மாணவர்களை ஊக்குவித்தனர்.

இப்பயிலரங்கில் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி, ஆலோசகர் டாக்டர் எஸ். பரிவள்ளல், விஞ்ஞானி டாக்டர் எஸ். மகேஸ்வரன், டாக்டர் சி. பாரதி பிரியா, விஞ்ஞானி திரு ஏ. கே. ஃபர்வாஸ் அகமது, விஞ்ஞானி டாக்டர் எஸ். சுந்தர் குமார், விஞ்ஞானி டாக்டர் எம். கீர்த்தனா மற்றும் முதன்மைத் தொழில்நுட்ப அலுவலர் திரு இரா. த. சதீஷ் குமார் ஆகியோர் அமர்வுகளை நடத்தினர்.

செயல்விளக்கங்கள் மற்றும் நேரடிச் சோதனைகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இம்மையத்தின் அறிவியலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியதன் மூலம், வகுப்பறையில் கற்ற அறிவியல் கருத்துகளை நடைமுறைப் பயன்பாடுகளுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கு குறித்த புரிதலும் மேம்பட்டது. இச்செயல்பாடுகள் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் புதுமையான சிந்தனை ஆகியவற்றை வளர்க்க உதவின.

மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் இப்பயிலரங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பழங்குடியினர் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் புதுமையான சிந்தனையையும் வளர்ப்பதுடன், மாணவர்–அறிவியலாளர் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதிலும் சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் இப்பயிலரங்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

****

AD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330765) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: English