வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏற்றுமதியை அதிகரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவது குறித்த மாநில அளவிலான பயிலரங்கு சென்னையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 8:19PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் சென்னை மண்டல அலுவலகம், தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டி அமைப்பு மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு  ஆகியவற்றுடன் இணைந்து, “தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கை நடத்தியது. சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தமிழ்நாட்டின் ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயிலரங்கு நடைபெற்றது.

 

இந்தியாவின் ஒன்பது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்க சர்வதேச சந்தை வாய்ப்புகள் குறித்து பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின் கீழ் உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  மதிப்பு சுமார் 60 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த ஒப்பந்தங்களைத் திறம்படப் பயன்படுத்தி உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல், நடப்பாண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

இப்பயிலரங்கில் பொறியியல், தோல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வேளாண்மை உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த 198 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள், வர்த்தக சபைகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சென்னை மண்டல வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி தேவராஜ், இந்தியாவின் ஒன்பது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இந்த ஒப்பந்தங்கள், சுமார் 60 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கொண்ட நாடுகளின் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திருமதி எஸ். கீர்த்தனா அவர்கள் நிறைவு விழாவைச் சிறப்பித்தார்.  விழாவில் உரையாற்றிய அமைச்சர், ஏற்றுமதியை அதிகரிக்கச் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பெண் தொழில்முனைவோர் தங்களது வணிகத்தைப் புதிய துறைகளில் விரிவுபடுத்தி, வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்கமளித்தார்.

இப்பயிலரங்கில் சென்னை மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன், தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் திரு கே. விவேகானந்தன், நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு எச். மனோஜ் மற்றும் சென்னை மண்டல வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

****

VJ/EA/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330641) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English