இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 2:39PM by PIB Chennai
மொழித் தடைகளை நீக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, நோயாளிகளை மையமாகக் கொண்ட மருத்துவ சேவையை மேம்படுத்தவும் பன்மொழி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த தொழில்நுட்பப் பயிலரங்கம் ஜிப்மரில் நடைபெற்றது. மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பாஷினி பிரிவு , புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருடன் இணைந்து, 'பாஷினி உத்யத்' (BHASHINI Udyat) குறித்த தொழில்நுட்ப பயிலரங்கத்தை நடத்தியது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், மொழித் தடைகளை நீக்கவும், சுகாதார சேவைகளை அனைவரும் எளிதில் அணுகுவதை உறுதி செய்யவும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பன்மொழித் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டது.

அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார சேவைக்காக பன்மொழி செயற்கை நுண்ணறிவை விரிவுபடுத்துதல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், ஜிப்மர் நிறுவனத்தைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தியல் பணியாளர்கள், மாணவர்கள் , தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டனர். பல்வேறு மொழிப் பின்னணி கொண்டவர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு மொழித் தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவும் என்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக், ஜிப்மர் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் டாக்டர் ரவி குமார் சிட்டோரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாக்கா வினோத் குமார், நிர்வாகத் துணை இயக்குநர் திரு ஆர். கேசவன், திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரம்ராஜன், தலைமைச் செயல் அதிகாரி திரு ஹவா சிங், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பு அதிகாரி டாக்டர் ஆனந்த், பிற அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக் உட்பட பாஷினி குழுவினர், ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மருத்துவத் துறையில் பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகள், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஷினி தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் மொழித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய மொழிகளுக்கும் நிஜ உலகத் தேவைகளுக்கும் ஏற்ற செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்க, மொழித் தரவுகளும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். நடைமுறைச் சவால்களைக் கண்டறிவதற்கும், சுகாதார அமைப்புகளுக்கான பயன்பாட்டு நிகழ்வுகளைத் தனிப்பயனாக்குவதற்கும், ஜிப்மரின் பல்துறை பிரிவுகள் தங்கள் துறைசார் அறிவைப் பகிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாஷினி பிரிவு மூத்த பொது மேலாளர் திரு சைலேந்திர பால் சிங் பேசுகையில், பாஷினியின் மொழித் தொழில்நுட்பத் தளத்தின் சேவைகள், பயன்பாட்டு இடைமுகங்கள், ஒருங்கிணைப்புத் திறன்கள் உள்ளிட்ட அதன் ஆற்றல்களை விளக்கினார். இந்தத் தளம், உருவாக்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் பன்மொழி டிஜிட்டல் பயன்பாடுகளை ஆராய்வதற்கும், பல்வேறு துறைகளில் மொழிகளை உள்ளடக்கிய சேவைகளை உருவாக்குவதற்கும் எவ்வாறு உதவும் என்பதை அவர் விளக்கினார்.
இந்தப் பயிலரங்கில், பாஷினி மூலம் இயங்கும் பயன்பாடுகள், மொழித் தொழில்நுட்பத் தீர்வுகளின் செயல்விளக்கங்கள் இடம்பெற்றன. இவை பன்மொழித் தொடர்பு, குரல்வழி தகவல்கள், மொழிபெயர்ப்பு, டிஜிட்டல் அணுகல்தன்மை, மொழி வள மேம்பாடு ஆகியவற்றில் உள்ள திறன்களை வெளிப்படுத்தின. இந்தத் திறன்களை மருத்துவத்துறை அமைப்புகளுக்கும், நோயாளிகள் - சுகாதார நிபுணர்களிடையேயான தகவல் தொடர்புத் தேவைகளுக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்தை இந்த அமர்வுகள் வழங்கின.
பாஷினியின் மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஆற்றலை இந்தப் பயிலரங்கம் எடுத்துக்காட்டியது.
இந்த முயற்சி, தொழில்நுட்ப ஆதரவுடன் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதிலும், மொழிப் பின்னணிகளைக் கடந்து மக்களுக்கான சேவைகளை வழங்குவதிலும் உள்ள ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
*******
AD/PLM/RJ