சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் பிஐஎஸ் அமலாக்க நடவடிக்கை: 300-க்கும் மேற்பட்ட போலியான பிஐஎஸ் பதிவு எண்களுடன் கூடிய மொபைல் பேட்டரிகள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 9:23PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அலுவலர்கள், 22 அக்டோபர் 2026 அன்று, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஏ1-காம்போ கிங் (A1-Combo King) என்ற மொபைல் ஹார்டுவேர் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தி, பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பிஐஎஸ் தரநிலை முத்திரையை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியதாகவும், இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறியதாகவும் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை பிஐஎஸ் சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

  

சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையின்போது, BIS தரநிலை முத்திரையுடன் கூடிய, செல்லுபடியாகாத அல்லது சம்பந்தப்பட்ட தயாரிப்பின் பிராண்டிற்கு அங்கீகரிக்கப்படாத பதிவு எண்களைக் கொண்ட லித்தியம்-பாலிமர் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளை பிஐஎஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். தயாரிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்த பதிவு எண்கள் வேறு பிராண்டுகளுக்கு வழங்கப்பட்டவை அல்லது சம்பந்தப்பட்ட பிராண்டிற்குச் செல்லுபடியாகாதவை எனக் கண்டறியப்பட்டதால், பிஐஎஸ் தரநிலை முத்திரை மற்றும் பதிவு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

  

இந்த நடவடிக்கையின்போது, செல்லுபடியாகாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பிஐஎஸ் பதிவு எண்களுடன் BIS தரநிலை முத்திரை பொறிக்கப்பட்ட சுமார் 300 லித்தியம்-அயன் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தயாரிப்புகள் இந்திய தரநிலை IS 16046 (Part 2):2018 / IEC 62133-2:2017-ன் கீழ் வருகின்றன. மேலும், பிஐஎஸ் சட்டம், 2016-ன் பிரிவு 16-ன் கீழ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) அறிவிக்கப்பட்ட Electronics and Information Technology Goods (Requirement of Compulsory Registration) அறிவிப்பின்படி, கட்டாயப் பதிவு பெற வேண்டிய தயாரிப்புகளாகும். இந்தக் கட்டாயப் பதிவு திட்டத்தின் (Compulsory Registration Scheme – CRS) கீழ், சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் பிராண்டிற்கு செல்லுபடியாகும் பிஐஎஸ் பதிவு பெற்றிருப்பது கட்டாயமாகும். வேறொரு பிராண்டிற்கு வழங்கப்பட்ட பிஐஎஸ் பதிவு எண்ணை, வேறு பிராண்டின் பெயரில் சந்தைப்படுத்தப்படும் தயாரிப்புகளில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாததுடன், பிஐஎஸ் சட்டம், 2016-ன் கீழ் சட்ட விதிமீறலாகவும் அமைகிறது.

 

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் அவர்கள் கூறுகையில், “பிஐஎஸ் தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தவறான தயாரிப்பு அடையாளக் குறிப்புகளால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும் பிஐஎஸ் தொடர்ந்து சந்தை கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின்னணுப் பொருட்கள் மற்றும் பேட்டரிகளை வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தயாரிப்பு அல்லது அதன் உறைகளில் தரநிலை முத்திரை அல்லது பதிவு எண் இருப்பதை மட்டும் நம்பி வாங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். வாங்கப்படும் தயாரிப்பு மற்றும் அதன் பிராண்டிற்கு பிஐஎஸ் பதிவு செல்லுபடியாகும் வகையில் உள்ளதா என்பதை நுகர்வோர் BIS Care செயலி மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பிஐஎஸ் சட்டம், 2016-ன் கீழான விதிமீறல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், பொருந்தக்கூடிய தரநிலைகளுக்கு இணக்கத்தை உறுதி செய்து நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதில் BIS உறுதியாக உள்ளது” என்றார்.

BIS சட்டம், 2016 மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்ட விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிஐஎஸ் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, பிஐஎஸ் சட்டம், 2016-ன் பிரிவு 29-ன் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000-க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதம் பொருட்களின் மதிப்பின் பத்து மடங்கு வரை உயர்த்தப்படலாம் அல்லது சிறைத்தண்டனையும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்.

கட்டாயச் சான்றிதழ் பெற வேண்டிய தயாரிப்புகளை வாங்கும்போது, அவற்றின் பிஐஎஸ் தரநிலை முத்திரை (ISI Mark) மற்றும் பதிவு விவரங்களின் உண்மைத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டாயப் பதிவு திட்டத்தின் கீழ் வரும் தயாரிப்புகளுக்கு, பதிவு எண் சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் பிராண்டிற்குப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவரங்களை BIS Care செயலி, பிஐஎஸ் இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS இணையதளம் manakonline.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்கலாம். பிஐஎஸ் தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுதல் அல்லது உரிய சான்றிதழ் இன்றி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுதல் தொடர்பான புகார்களை BIS Care செயலி மூலமாகவோ அல்லது BIS சென்னை கிளை அலுவலகத்தின் cnbo@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கலாம்.

***

AD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327223) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English