PIB Backgrounder
சரஸ் வர்த்தக கண்காட்சி 2026: கிராமப்புற மகளிர் தொழில்முனைவோரின் தயாரிப்புகளுக்கு தேசிய அளவில் சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 11:11AM by PIB Chennai
மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் கிராமப்புற கலைஞர்களின் கைவினைப்பொருட்கள் விற்பனை (சரஸ்) கண்காட்சிகள், கிராமப்புற மகளிர் தொழில்முனைவோரை சந்தைகள், வாடிக்கையாளர்கள், வணிக வாய்ப்புகளுடன் இணைக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் நடைபெறும் தேசிய சரஸ் கண்காட்சி 2026, தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு வெளியே நடைபெறும் முதல் தேசிய சரஸ் கண்காட்சியாகும். இதில் 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மகளிர் தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர். மகளிரின் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் இலக்கை அடைவதற்கும் இக்கண்காட்சி உதவுகிறது.
இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பாரம்பரியத் திறன்கள், கைவினைக்கலைகள், தொழில்முனைவுத் திறன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கைத்தறிப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பொருட்களை தயாரிப்பதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகளும் அவசியமாகின்றன. 1999-ம் ஆண்டு தில்லியில் சுமார் 65 பயனாளிகளுடன் தொடங்கப்பட்ட தேசிய சரஸ் கண்காட்சி, தற்போது தேசிய, மாநில, பிராந்திய, மாவட்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதுவரை 117 தேசிய சரஸ் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ரூ.200 கோடிக்கும் அதிகமான வருடாந்திர விற்பனை பதிவாகியுள்ளது.
விஜயவாடாவின் புன்னமி காட் பகுதியில் அக்டோபர் 13 முதல் 31, 2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1,500 மகளிர் சுயஉதவிக் குழு தொழில்முனைவோர், லட்சாதிபதி சகோதரிகள் பங்கேற்கின்றனர். 650-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பாரம்பரியத் துணிகள், கைவினைப்பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், பதனப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஆண்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சம் குடும்ப வருமானம் ஈட்டும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் லட்சாதிபதி சகோதரிகள் என அழைக்கப்படுகின்றனர். 2024-25 இடைக்கால பட்ஜெட்டில், இந்தத் திட்டத்தின் கீழ் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2025 டிசம்பருக்குள் இந்த இலக்கு எட்டப்பட்டது. 2026 பிப்ரவரியில், இலக்கு 6 கோடியாக உயர்த்தப்பட்டது. மகளிர் தொழில்முனைவோரின் வருமானத்தை உயர்த்துவதுடன், சந்தை அணுகல், தயாரிப்புகளுக்கான விளம்பரம், விற்பனை வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் சரஸ் கண்காட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
விஜயவாடா கண்காட்சியில் வெற்றிகரமான மகளிர் தொழில்முனைவோரின் அனுபவங்களைப் பகிரும் அரங்குகள், தொழில் திறன் பயிற்சிகள், அரசு அமைப்புகளுடன் இணைக்கும் வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்தல், முத்திரையிடல், மின்னணு வணிகம், சமூக ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய மட்பாண்டத் தயாரிப்பு, கண்ணாடி பதித்த எம்பிராய்டரி போன்ற கைவினைத் திறன்கள் நேரடியாக விளக்கப்படுகின்றன. 50 உணவு அரங்குகள் மூலம் 28-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான மகளிர் தொழில்முனைவோர் தங்களது உணவுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில், மின்னணுப் பணப்பரிவர்த்தனைகள், சரஸ் இணைய விற்பனைத் தளம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. 2025-ல் தொடங்கப்பட்ட சரஸ் கண்காட்சி செயலி, சுயஉதவிக் குழுக்களின் பங்கேற்பு, வருகைப் பதிவு, நிகழ்ச்சி தொடர்பான தகவல் பகிர்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இத்தகைய முயற்சிகள், கிராமப்புற மகளிரின் பாரம்பரியத் திறன்களை, நிலையான வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளாக மாற்றுவதுடன், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தேசிய சந்தைகளில் அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழிவகுக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325711®=3&lang=1
***
SS/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325862)
வருகையாளர் எண்ணிக்கை : 9