சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையத்தை இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கடரமணி திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 6:48PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் சேவை மையத்தை, இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் திரு. ஆர். வெங்கடரமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், இம்மையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரரும் இளையோரின் முன்னோடியுமான திருப்பூர் குமரனைக் கௌரவிக்கும் வகையில், “திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம்” என்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டது.

ஐதராபாத் நல்சார் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீகிருஷ்ண தேவ ராவ், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, ஆய்வுகள் இயக்குநரக இயக்குநர் பேராசிரியர் தரணிக்கரசு, மாணவர் நலத் துறை முதல்வர் பேராசிரியர் ஒய். வெங்கட ராவ், மாணவர் நலத் துறை இணை முதல்வர்கள் டாக்டர் ரஜனீஷ் அனுபம் மற்றும் டாக்டர் ரேது தியாகி ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. மேலும், முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன், தேசபந்து இளைஞர் சங்கத்தை நிறுவி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1932-ம் ஆண்டு ஜனவரி 11-ம் நாள், திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்றபோது, காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களால், 28 வயதிலேயே வீரமரணம் அடைந்தார்.

இறக்கும்போது, ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டிருந்த இந்தியத் தேசியக் கொடியைத் தன் கையில் ஏந்தியிருந்தார். இந்தத் துணிச்சலான செயலுக்காக, அவருக்கு “கொடிக்காத்த குமரன்” என்று இன்றும் போற்றப்படுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது நூற்றாண்டுப் பிறந்தநாள் விழாவையொட்டி அக்டோபர் 2004-ல் இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. திருப்பூர் குமரன், இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊரான இடத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்திற்கு எதிரே அமைந்துள்ள திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம் வளாகத்தில் மாணவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி, நிர்வாக, தனிநபர் மற்றும் நலன் சார்ந்த சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த நிறுவன வசதியாக இம்மையம் செயல்படும்.

மாணவர் சேர்க்கை மற்றும் பதிவு முதல் பட்டப்படிப்பு முடிவு, வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் மாணவர் தொடர்பு வரையிலான கல்விப் பயணம் முழுவதிலும், இம்மையம் மாணவர்களுக்கான ஒற்றைத் தொடர்பு மையமாகச் செயல்படும். கல்விச் சிறப்பு, மனநலம், வேலைவாய்ப்பு, தலைமைத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஆதரவான, உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் மாணவர் நட்பு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மையம் புதுவைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் மைய நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

மாணவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தலைமை விடுதி காப்பாளர் அலுவலகம், வேலைவாய்ப்புப் பிரிவு, மாணவர் நலத் துறை முதல்வர் அலுவலகம், ஒழுங்கு மேலாண்மைக் குழு மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் முக்கிய மாணவர் ஆதரவுப் பிரிவுகள் உள்ளிட்ட மாணவர் சேவை அலுவலகங்கள் இம்மையத்தில் இயங்குகின்றன. மாணவர் தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் இந்தத் திட்டம், அனைத்து மாணவர்களின் நலன் மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு அவர்களால் உருவாக்கப்பட்டு, நோக்குடன் வடிவமைக்கப்பட்டது.

இந்த மையத்தில், சுமார் 500 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட மேடையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான இடமாகச் செயல்படும். அரங்கத்தைச் சுற்றி இரண்டு உணவு விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டங்கள் மற்றும் கல்விசார் விவாதங்களை நடத்துவதற்காக ஒரு சிறு வட்ட மேசை கருத்தரங்கு அரங்கமும் இம்மையத்தில் உள்ளது.

திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம் நிறுவப்பட்டது, புதுவைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலனை வலுப்படுத்தவும், நிறுவனச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வளாகச் சூழலை உருவாக்கவும் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

***

AD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325500) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English