சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா: 1,993 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 5:37PM by PIB Chennai
கடல்சார் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மத்தியப் பல்கலைக்கழகமான இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வளாகங்கள், இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 1,993 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களில் 1,605 பேர் மாலுமிகள் ஆவர். விழாவில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் Dr. மாலினி சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற விழாவில், 13 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள், 4 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் சாகர்மாலா புத்தொழில் மற்றும் புத்தாக்க முன்முயற்சியின் கீழ், கடல்சார் புத்தாக்க மையத்தை அமைப்பதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கடல்சார் இந்தியா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளை, சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி ஆகியவற்றுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC), நார்வேயின் நார்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றுடனும் பல்கலைக்கழகம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் Dr. ராஜூ பாலாஜி, 2025-26-ல் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் 19 சர்வதேச ஒப்பந்தங்கள், 11 தேசிய அளவிலான ஒப்பந்தங்களைக் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். நீண்டகாலப் படிப்புகளுடன் 22 புதிய பயிற்சித் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறுவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவின் கடல்சார் தொலைநோக்குத் திட்டங்களான 2030 கடல்சார் தொலைநோக்குப் பார்வை, அமிர்த கால கடல்சார் தொலைநோக்குப் பார்வை 2047 ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில், திறமையான கடல்சார் பணியாளர்களை உருவாக்குதல், ஆராய்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் கட்டமைப்பில் 21 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.

இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு. K. சரவணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கமோடோர் K. D. ஜோஷி, பல்கலைக்கழகத்தின் கப்பல் கட்டமைப்பு மற்றும் கடல்சார் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் K. M. சிவக்கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

***
AD/PD/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2324036)
வருகையாளர் எண்ணிக்கை : 27