சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஐஎஸ் சார்பில் மேலாண்மை அமைப்புச் சான்றளிப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 6:34PM by PIB Chennai
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), உலக தரநிலைகள் தினம் 2026 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை தரமணியில் அமைந்துள்ள பிஐஎஸ் அலுவலக வளாகத்தில் பயிலரங்கை நடத்தியது. பிஐஎஸ் வழங்கும் பல்வேறு மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள், அவற்றின் பயன்கள் மற்றும் நிறுவனங்களின் தரம், நம்பகத்தன்மை மற்றும் வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் பங்கு குறித்து இப்பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிஐஎஸ் அதிகாரிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகளின் வகைகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கு முறையான மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி, திரு. M.A.J. வினோத், விஞ்ஞானி-F & தென் மண்டல துணை தலைமை இயக்குநர், பிஐஎஸ், சென்னை வரவேற்புரையுடன் தொடங்கியது. பிஐஎஸ் வழங்கும் பல்வேறு மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளவும், அவை நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கும் நம்பகத்தன்மைக்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இப்பயிலரங்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை அமைப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம் நிறுவனங்கள் தங்களது செயல்முறைகளை மேம்படுத்தவும், தரத்தின் மீதான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறவும் முடியும் என வலியுறுத்தினார்.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் திரு. S. D. தயானந்த் நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கினார். மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தரம், செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பயிலரங்கின் முக்கிய அம்சமாக, பிஐஎஸ் மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புத் துறையின் (MSCD) சார்பில், விஞ்ஞானி-E / இயக்குநர் திரு. ராஜ்பால், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள் குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தினார். பிஐஎஸ் வழங்கும் பல்வேறு சான்றளிப்புத் திட்டங்களை அவர் விளக்கினார். இச்சான்றளிப்புகள் நிறுவனங்களின் செயல்முறைகளைச் சீரமைத்தல், செயல்திறனை மேம்படுத்துதல், தரத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவுவதுடன், நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் போட்டித்திறனை மேம்படுத்தி, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிலையான வணிக வளர்ச்சிக்கும் புதிய வணிக வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழிவகுக்கும் என எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. வளர்ந்து வரும் வணிக மற்றும் தொழில்நுட்பச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பங்கேற்பாளர்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடி, மேலாண்மை அமைப்புச் சான்றளிப்புகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான தங்களது கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெற்றனர்.




***
TV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323154)
வருகையாளர் எண்ணிக்கை : 9