கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமரின் பரிசுப் பொருட்கள் ஏலத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம், விளையாட்டு சாதனைகளை பிரதிபலிக்கும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 6:16PM by PIB Chennai
பிரதமரின் நினைவுப் பரிசுகள் மின்னணு ஏலத்தின் 8-வது பதிப்பு, இணையதளம் வாயிலாக 2026 அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்கள் மற்றும் இதில் பங்கேற்க [https://pmmementos.gov.in] என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பரிசுப் பொருட்கள்:
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவகத்தால் வழங்கப்பட்ட கன்னியாகுமரியின் மங்களகரமான பாதச்சுவடு குறிப்பிடத்தக்க நினைவுப் பரிசுகளில் ஒன்றாகும். பகவதி அம்மனின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளதாக நம்பப்படும் 'ஸ்ரீ பாதப்பாறை'யுடன் இப்பொருள் தொடர்புடையதாகும்.
தத்துவஞானியும் ஆன்மீகச் சிந்தனையாளருமான ஸ்ரீ ராமானுஜராச்சாரியார் போதிக்கும் பாவனையில் நுணுக்கமாக வடிக்கப்பட்ட அவரது ஆன்மீக மற்றும் அறிவுசார் மரபைப் பிரதிபலிக்கும் திருவுருவ நினைவுப் பரிசு ஒன்றும் இதில் அடங்கும்.
மேலும் இத்தொகுப்பில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கோயில் தேர்களின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு, கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் தேர் மாதிரியும் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டு நினைவுப் பொருட்களில், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனின் பேட்மிண்டன் மட்டையும், பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனின் கையொப்பமிட்ட பேட்மிண்டன் மட்டையும் இடம்பெற்றுள்ளன.
உயரம் தாண்டுதலில் மூன்று முறை பாராலிம்பிக் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுடன் தொடர்புடைய காலணிகளும் (ஷூ) இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காட்சிப்படுத்தும் உலோகத்தாலான நடராஜர் சிலை, தமிழ்நாட்டின் பக்தி மற்றும் கலை மரபுகளைப் பறைசாற்றுகிறது.
தங்கத் தகடு மற்றும் குந்தன் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சாவூர் பாணி வீணைக் கலைப்படைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும்.
இவை தவிர, முருகப்பெருமானின் தஞ்சாவூர் ஓவியம், முருகப்பெருமானின் தங்கத் தகடு வடிவமைப்பு, ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் பக்தி சித்திரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் குறிக்கும் பித்தளை நினைவுப் பரிசு ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஜரிகை மற்றும் நெசவு அலங்காரங்களுடன் கூடிய தென்னிந்திய அங்கவஸ்திரங்கள் பாரம்பரிய ஜவுளி வகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த 31 நினைவுப் பரிசுகளும் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டின் பன்முக கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்துவதுடன், மாநிலத்தின் ஆன்மீக மரபுகள், பாரம்பரியக் கலை, கைவினைத்திறன், வரலாற்று ஆளுமைகள், ஜவுளி மற்றும் விளையாட்டு சாதனைகளை பிரதமரின் நினைவுப் பரிசுகள் மின்னணு ஏலம் 2026-ன் வாயிலாக பறைசாற்றுகின்றன.
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316162)
வருகையாளர் எண்ணிக்கை : 17