சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எரிசக்தி சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண உதவிடும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 2:17PM by PIB Chennai

செவ்ரான் எஞ்சின் நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் இணைந்து எரிசக்தித் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. எரிசக்தி சார்ந்த முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பணியில் ஈடுபட்டுள்ள கண்டுபிடிப்பாளர்கள், மாணவர் குழுக்கள், தனிநபர்கள், ஆய்வாளர்கள், சமூக தொழில்முனைவோர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள், எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தீர்வுகள், கார்பன் பயன்பாடு, சுழற்சி அடிப்படையிலான பொருளாதாரம், எரிசக்தி ஆதாரங்களைத் திறம்பட பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு அவற்றின் வளர்ச்சி சார்ந்த நிலைகளுக்கு ஏற்ப ஐஐடி மெட்ராஸ் புத்தாக்கச் சூழல் அமைப்பின் மூலம் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய செவ்ரான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அக்ஷய் சாஹ்னி, இந்தியாவின் வலுவான பொறியியல், தொழில்நுட்பத் திறமையையும், உலக அளவிலான வளங்களையும் ஒன்றிணைத்து எதிர்கால எரிசக்தி தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தத் திட்டம் செயல்படும் என்று கூறினார்.

இந்தக் கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் உயர்கல்வி நிறுவனத்தின் டீன், போராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், இத்திட்டத்தின் மூலம் யோசனைகளை நடைமுறைக்கு உகந்த தீர்வுகளாக மாற்றுவதற்கு கண்டுபிடிப்பாளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தொழில்நுட்ப நிபுணத்துவம், வலுவானப் புத்தாக்கச் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவதற்கு இத்திட்டம் வகை செய்வதாக குறிப்பிட்டார்.

***

SS/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315058) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English