சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல்–மின்னணு வர்த்தகத்திற்கான வலையமைப்பு: மதுரையில் மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 11:51AM by PIB Chennai
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி, மதுரை அஞ்சல் தென் மண்டலத்தில் செயல்படுத்தப்பட்ட இந்திய அஞ்சல்–மின்னணு வர்த்தகத்திற்கான வலையமைப்பினை தொடங்கி வைத்தார். விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கைவினைஞர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர உள்ளூர் உற்பத்தியாளர்களை இந்திய அஞ்சல் துறையின் சரக்கு போக்குவரத்து கட்டமைப்புடன் இந்த வலையமைப்பு இணைக்கிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அஞ்சல் தென் மண்டலம் மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் பார்சல்களை சேகரித்தல், முன்பதிவு செய்தல், அனுப்புதல், கண்காணித்தல் மற்றும் இறுதிக்கட்ட விநியோகம் ஆகிய சேவைகளுக்கு இந்திய அஞ்சலைப் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆர்டர்களின் சேகரிப்பு, செயலாக்கம், பார்சல் செய்தல் மற்றும் அனுப்புதல் ஆகிய பணிகளுக்காக மதுரை தலைமை அஞ்சலகத்தில் பிரத்யேகக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் எஸ். கீழப்பட்டி கிராமத்தை “சம்பூர்ண சுகன்யா கிராம்” என அமைச்சர் அறிவித்தார். இக்கிராமம், மதுரை அஞ்சல் கோட்டத்தின் திருமங்கலம் உபகோட்டம், பேரையூர் துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சந்தையூர் கிளை அஞ்சலகத்தின் சேவை எல்லைக்குட்பட்டதாகும். எஸ். கீழப்பட்டி கிராமத்தில் 10 வயதுக்குட்பட்ட தகுதியுடைய அனைத்து (115) பெண் குழந்தைகளுக்கும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம், 100 சதவீத இலக்கு எட்டப்பட்டது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு கணக்குப் புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.
சம்பூர்ண சுகன்யா கிராம் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு தென் மண்டலத்தில் உள்ள மொத்தம் 6,861 கிராமங்களில் 2,626 கிராமங்கள் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. தகுதியுடைய பெண் குழந்தைகளைக் கண்டறிதல், அவர்களுக்குக் கணக்குகளைத் தொடங்க உதவுதல் மற்றும் தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயன்களைச் சென்றடையச் செய்தல் ஆகியவற்றில் அஞ்சல் துறை மேற்கொண்ட தொடர் முயற்சிகளை இந்தச் சாதனை எடுத்துக்காட்டியது.
அதனைத் தொடர்ந்து, இந்திய அஞ்சல் துறையின் மதுரை தென் மண்டலச் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முன்னெடுப்புகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மண்டலத்தின் செயல்பாட்டு மற்றும் வணிகச் செயல்திறன், பொதுமக்களை மையமாகக் கொண்ட அஞ்சல் சேவைகள், நிதி உள்ளடக்க முயற்சிகள், பார்சல் மற்றும் மின்னணு வர்த்தகச் சரக்குப் போக்குவரத்து விரிவாக்கம், தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் இதர முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


***
TV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312927)
வருகையாளர் எண்ணிக்கை : 35