சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில், தர்மபுரி மாவட்டம், சிட்டிலிங்கி பள்ளத்தாக்குப் பகுதி பழங்குடியின கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 11:42AM by PIB Chennai

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மற்றும் சித்தேரி மலைகளுக்கு இடையே அமைந்துள்ள சிட்டிலிங்கி பள்ளத்தாக்குப் பகுதியின் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்காக, கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனம் (ICAR-SBI), "பழங்குடியின விவசாயிகளுக்கான மேம்படுத்தப்பட்ட கரும்பு தொழில்நுட்பங்கள் (Training programme on “Improved Sugarcane Technologies for Tribal Farmers (TISTT)” )" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தியது . செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சித் திட்டமானது , “பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தின்' (Development Action Plan for Scheduled Tribe Component -DAPSTC) கீழ் செயல்படுத்தப்பட்டது.

 முதற்கட்ட பயிற்சி முகாமினை துவக்கி வைத்து உரையாற்றிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தராஜ், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கரும்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக்காட்டினார். 2011-ல் 7,000 எக்டேருக்கும் அதிகமாக இருந்த தர்மபுரி மாவட்டத்தின் கரும்பு சாகுபடி பரப்பு, தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். புதிய மற்றும் அதிக மகசூல் தரும் ரகங்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், புதிதாகத் தோன்றும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், இதன் மூலம் கரும்பு சாகுபடியை அதிக லாபம் தரக்கூடியதாக மாற்றுமாறும் விவசாயிகளை ஊக்குவித்தார்.

நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், DAPSTC திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான புத்திர பிரதாப், மாநிலத்தில், கரும்பு சாகுபடியில் பழங்குடியினரின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தார். தர்மபுரி பகுதியில் வறட்சி மேலாண்மை, வெள்ளை வேர்ப்புழு  மேலாண்மை மற்றும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியின் போது, புதிதாக வெளியிடப்பட்ட அதிக மகசூல் தரும் 'Co 21003' என்ற கரும்பு ரகத்தின் விதைக்கணைகள், அவற்றை பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நிறைவாக, முதுநிலை விஞ்ஞானி கோபி நன்றியுரை ஆற்றினார்.



***

TV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312883) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English