தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2014-க்கு பின்னர் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2026 5:08PM by PIB Chennai
நாடு முழுவதும் நடைபெறும் 20-வது வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் ரயில்வே, சுகாதாரம், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு. சந்திரசேகர் பெம்மசானி கலந்து கொண்டு 137 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி கடந்த 12 ஆண்டுகளில், சுமார் 12.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு ஆணைகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசுப் பணிகளில் இணைந்துள்ளவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுணர்ந்து பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 2014க்கு முன்பு இந்தியாவில் இரண்டு அலைபேசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன என்றும் தற்போது நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் உலகின் இரண்டாவது பெரிய அலைபேசி உற்பத்தி நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இன்று இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறினார். 2047-ல், இந்தியா சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை நாம் எட்ட அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமை சுங்க வரி ஆணையர் திரு எஸ் கே விமலநாதன், சுங்கவரி ஆணையர் திரு பிரசாத் அடெல்லி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312441)
வருகையாளர் எண்ணிக்கை : 18