சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகவியலாளர்கள் திகழ்கின்றனர்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குநர் திரு வை பழனிச்சாமி
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 6:42PM by PIB Chennai

மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் கரூரில் இன்று(18.09.2026) ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
ஊடகங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துதல், மண்டல பத்திரிகையாளர்களின் திறன்களை வளர்த்தல், மத்திய,மாநில அரசுகளின் நலத்திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயிலரங்கில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு பி அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிலரங்கில் சிறப்புரை ஆற்றிய தென் மண்டல தலைமை இயக்குநர் திரு வை பழனிச்சாமி, அரசின் கொள்கைகள் கடைக்கோடி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் பாலமாகச் செயல்படுவதாக கூறினார். மேலும், செய்திகள் துல்லியமாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பிரதமரின் யஷஸ்வி திட்டம், பத்திரிகையாளர் நலதிட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். போலியான செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டுள்ள செய்திகளில் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பிரிவின் பங்களிப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ரமேஷ், சந்தை விரிவாக்கம், இயற்கை சாயங்கள், கரூர் மாவட்டத்தில் ரூ 25,000 கோடி மதிப்பிலான ஜவுளித் தொழிலுக்கான முன்மொழியப்பட்ட சோதனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விவரித்தார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி திரு ரூசோ கலை, நவீன கழிவு மேலாண்மை குறித்து விளக்கினார். மேலும், கழிவுகளை பிரிப்பதற்கும், வீட்டிலேயே உரம் தயாரிக்கும் முறை குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய கரூர் மாவட்டத் தொழில் மையத்தின் துணை இயக்குநர் திரு எஸ் முருகன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் போன்ற மானியத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் தானியங்கிமயமாக்கும் உத்திகள் குறித்தும் ரூ.1 கோடி வரையிலான எந்திர மானியங்கள் குறித்தும் ஜவுளித்துறை அதிகாரி திருமதி எஸ் சாந்தா எடுத்துரைத்தார்.

இந்தப் பயிலரங்கின் இறுதி அமர்வில் உரையாற்றிய கரூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயச்சந்திரன், செயற்கை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
இந்தப் பயிலரங்கில், கரூர் மாவட்டத்திலிருந்து அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பத்திரிகையாளர்களின் பொறுப்புணர்வு, அரசின் தகவல் தொடர்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உண்மை சரிபார்ப்பு மற்றும் வளர்ச்சிக்கான முன்முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு இந்தப் பயிலரங்கு ஒரு தளமாக அமைந்துள்ளது.
***
TV/SS/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2312223)
வருகையாளர் எண்ணிக்கை : 26