பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமொழி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போதை இல்லாத இளைய சமுதாய திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2026 1:25PM by PIB Chennai

வணக்கம்!

இன்று நமது இந்தியாவின் குடிமக்களாகிய நாம் அனைவரும் ஒரு மிகப்பெரிய, முக்கியமான லட்சியத்திற்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம். நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் துறவிகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பிற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 28ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணையம் வழியாக இணைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இளம் தோழர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இந்த நன்னாளில், இந்த நற்பணிக்கு உறுதியேற்க இணைந்துள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை நான் வரவேற்று வாழ்த்துகிறேன். இந்த இயக்கம் தனிநபருக்கானது, குடும்பத்திற்கான, சமுதாயத்திற்கான, எல்லாவற்றிற்கும் மேலாக நமது நாட்டிற்கானது.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமொழி இயக்கத்தில், 'போதையற்ற இளைஞர்கள்' என்ற பெயரே இதன் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள இந்த நேரத்தில், நமது இளைஞர்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், போதை எனும் கொடிய பழக்கத்திலிருந்து எப்போதும் விலகியிருப்பதும் மிகவும் அவசியம். அதுவே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். நமது இளைஞர்கள் போதையின் ஆபத்துகளைப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருந்து, அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். இந்த லட்சியத்தில் தேசிய போதையற்ற இளைஞர்கள் இயக்கம் இப்போது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

நண்பர்களே,

காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக, இப்புனித பூமியில் இத்திட்டம் கடந்த ஆண்டு ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அறிவியல் பூர்வமான தெளிவோடு, இதில் ஆன்மீக ஆற்றலும், துறவிகளின் ஆசிகளும், நமது உயரிய பண்பாட்டுப் பாரம்பரியமும் இணைந்துள்ளன. பல நூற்றாண்டுகளாகப் போதைப்பழக்கத்தை நிராகரித்து வந்த நமது பண்பாட்டு அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது. அதனால்தான், கோடிக்கணக்கான மக்களின் நலனுக்காக 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள் நம்முடன் இணைந்துள்ளன. சமூக அமைப்புகளும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும்  இந்த உறுதியை ஏற்றுக் கொண்டுள்ளன. அனைவருமாக இணைந்து 'காசி பிரகடனம்'  வாயிலாக ஒரு வழிகாட்டு வரைபடத்தை  உருவாக்கினோம். இன்று, காசியில் உருவெடுத்த இந்த சிந்தனை ஒரு தேசியத் திட்டமாக மாறியுள்ளது. இன்று முதல், 'போதையற்ற இளைஞர்கள்' இயக்கம் நாடு முழுவதும் தொடங்குகிறது.

நண்பர்களே,

சில முயற்சிகளைத் தனிநபராகச் செய்யும்போது, அது சோர்வையோ அல்லது மனத்தளர்ச்சியையோ தரலாம். ஆனால், அவை கூட்டு இயக்கங்களாக மாறும்போதும், கோடிக்கணக்கான மக்கள் தோளோடு தோள் நின்று பயணிக்கும்போதும், தனியாகச் செயல்பட முடியாதவர்கள்கூடப் புதிய ஆற்றலைப் பெறுகிறார்கள். கூட்டுச் சக்தி என்பது மிக வலிமையானது; இன்று இந்த இயக்கம் ஒவ்வொரு இளைஞனின் இதயத்தையும் தொடும். சற்று முன்புதான், நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் போதையற்ற வாழ்விற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். உங்கள் வாழ்க்கையைப் போதைப் பொருட்களிலிருந்து விலக்கிப் பாதுகாக்கவும், உங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமுதாயத்தில் போதை ஒழிப்புச் செய்தியைப் பரப்பவும் நீங்கள் உறுதியேற்றுள்ளீர்கள்.

நண்பர்களே,

இன்று எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி 100 வாரங்களுக்குத் தொடரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலை, பண்பாடு, விளையாட்டு, தியானம், ஆன்மீகம் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் போதை ஒழிப்புச் செய்தி புதிய மனிதர்களைச் சென்று சேரும். இந்த 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதையற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான 100 வலுவான அடிகளாக இருக்கும்.

நண்பர்களே,

இன்று, ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இணையம் வழியாக இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். 'மை பாரத்' அமைப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான தன்னார்வலர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். நமது என்.எஸ்.எஸ்  இளைஞர்களும் நம்முடன் இருக்கிறார்கள். வெவ்வேறு பகுதிகள், நிறுவனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இன்று ஒன்று திரண்டுள்ளனர் .இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவர்கள் நீங்கள்தான். இந்திய இளைஞர்களுக்குத் தங்களுடைய பொறுப்புகளும் கடமைகளும் நன்றாகத் தெரிந்திருக்கின்றன; அவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள். இதைப் பார்க்கும்போது எனக்கு அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகியிருக்கிறது!" உங்கள் அனைவருக்கும் இந்த இயக்கத்திற்கான எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் இளம் நண்பர்களே,

நீங்கள்தான் இந்தியாவின் ‘அமிர்த தலைமுறை’ . அடுத்த 20–25 ஆண்டுகளில், நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை வடிவமைப்பது மட்டுமன்றி, 2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக்கும் இலக்கை நோக்கி எடுத்துச் செல்லப்போவதும் நீங்கள்தான். அந்தச் சாதனையின் கனிகளை அறுவடை செய்து, அதன் உச்சத்தில் அமரப் போவதும் நீங்கள்தான். நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்கள் ஆற்றலும், கற்பனைத் திறனும், திறமையும் மிகவும் தேவை. அதனால்தான், தேசத்தின் நலனுக்காகவும், உங்கள் சொந்த வாழ்க்கைக்காகவும், போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பது அவசியமாகிறது. போதைப்பொருட்கள் உங்கள் கவனத்தை திசைதிருப்பி, கனவுகளிலிருந்து படிப்படியாக விலக்கி விடுகின்றன. சற்று முன்பு நிகழ்த்தப்பட்ட குறு நாடகம் இந்தப் பிரச்சனையையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும், அதை வெல்வதற்கான கூட்டுப் பாதையையும் அழகாக வெளிப்படுத்தியது. அது வெறும் நாடகம் மட்டுமல்ல - நம்மை விழிப்படையச் செய்து, போராடத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த செய்தி.

நண்பர்களே,

இன்று நமது இளைஞர்கள் புத்தொழில்களில்  முத்திரை பதிப்பதையும், செயற்கை நுண்ணறிவில்  முன்னிலை வகிப்பதையும், விளையாட்டுத் துறையில் மூவண்ணக் கொடியை உயர்த்துவதையும், விண்வெளி முதல் அறிவியல் வரை புதிய சாதனைகளைப் படைப்பதையும் நாம் காண்கிறோம். ஆனால், ஓர் இளைஞன் போதைப் பழக்கத்தில் விழும்போது, அது ஒரு தனிநபர் தோற்பது மட்டுமல்ல - ஒரு கனவு இறக்கிறது, ஒரு குடும்பம் உடைகிறது, சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதை அடிமைத்தனம் ஒரு தாயின் புன்னகையைப் பறிக்கிறது; தந்தையின் நம்பிக்கையைத் தகர்க்கிறது; ஒரு சகோதரியின் பாசப் பிணைப்பைத் தளர்த்துகிறது; தம்பிக்கான முன்னுதாரணத்தைத் திருடுகிறது; முதியவர்கள் தங்கள் கண்முன்னே தன் குழந்தை அழிந்து போவதைக் கண்டு துடிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. குடும்பங்களிலும் சமுதாயத்திலும் இது நடக்கும்போது, நாட்டின் பலமும் பலவீனமடைகிறது. இதைத் தங்கள் பயங்கரவாத திட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் எதிரிகள், நமது இளைஞர்களைப் போதை வலைக்குள் வீழ்த்தச் சதி செய்கின்றனர். போதைப்பொருட்களைக் குவித்துப் பணம் ஈட்டுவதோடு, நம்மைப் போன்ற நாடுகளை அழிக்கவும் முயல்கின்றனர். அதனால்தான், ஒவ்வொரு இளைஞனும் இந்த வலையில் விழாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.

நண்பர்களே,

போதையிலிருந்து விலகி இருப்பதன் மூலம், உங்கள் திறனை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருட்கள் தற்காலிகமாக ஒரு 'உயர்வை'த் தரலாம், ஆனால் அவை உங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கீழான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் ஒருபோதும் போதைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

நண்பர்களே,

நமது சமுதாயம் எப்போதும் போதைப் பழக்கத்தை ஒரு தீமையாகவே பார்த்து வந்துள்ளது. துறவிகளும் குருமார்களும் இதைப் பற்றி நம்மை எச்சரித்துள்ளனர். ஸ்ரீ குரு கிரந்த சாகிப் கூட இதைக் குறிப்பிடுகிறது: ஒரு பொருள் ஒருவனின் அறிவையும் விவேகத்தையும் மங்கச் செய்து, எது தன் சொந்தம் எது அந்நியமானது என்ற வேறுபாட்டை மறக்கடிக்கும் போது, அந்தப் போதை மனிதனை வீழ்ச்சிக்கு மட்டுமே வழிநடத்தும்.

நண்பர்களே,

நமது பண்பாடு எப்போதும் எச்சரிக்கைகளை வழங்குவதோடு, போதையிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளது. சமூகத்தின் ஆதரவு, யோகா மற்றும் தியானத்தின் சக்தி ஆகியவை போதைக்கு எதிராக நமது உள்மனதை வலுப்படுத்துகின்றன. இன்று நம்மிடம் மறுவாழ்வு மையங்களும்  உள்ளன. எனவே, ஓர் இளைஞன் போதைக்கு அடிமையானால், அவனுக்கான கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தமல்ல. சமூக அந்தஸ்தைக் காரணம் காட்டி குடும்பங்கள் இதை மறைக்கக் கூடாது. உதவி நாடுங்கள், திறந்தமனதுடன் பேசுங்கள், வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்; மருத்துவ உதவியைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையை மீட்கப் பாருங்கள். வீட்டில் திறந்த மனதுடன் உரையாடும் சூழலை உருவாக்குங்கள். அப்போதுதான் - தனிமைப்படல், ரகசியத்தன்மை, நள்ளிரவு நேரம் வரை விழித்திருப்பது, பணத்திற்காக அசாதாரணமான கோரிக்கைகள் வைப்பது போன்ற ஆரம்பகால அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்து, காலம் கடந்துபோகும் முன்பே தலையிட முடியும்.

நண்பர்களே,

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்: கல்விப் போதனையோடு சேர்ந்து, போதைப் பொருட்களின் ஆபத்துகளைப் பற்றியும் மாணவர்களிடம் பேசுங்கள். உங்கள் வளாகங்களில் இதற்கான ஒரு இயக்கத்தையே தொடங்குங்கள். உங்கள் முயற்சிகள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மேலும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - போதை அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருபவர்கள் பலவீனமானவர்கள் அல்ல; அவர்கள் உண்மையான வீராங்கனைகளும் வீரர்களும் ஆவர்! சமுதாயம் அவர்களை மதிக்க வேண்டும், அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும். அவர்களின் கடந்த காலம் அல்ல, அவர்களின் துணிச்சலே அவர்களை அடையாளப்படுத்துகிறது.

நண்பர்களே,

இந்த இயக்கத்தில் அரசு இளைஞர்களுடன் உறுதியாக நிற்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கைது நடவடிக்கைகள் பலமடங்கு அதிகரித்துள்ளன; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருட்களுக்கு எதிராக நமது அரசு எவ்வளவு கடுமையாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்திட்டத்தை முழு வீச்சில் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். நமது இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி, தங்களின் ஆற்றலைப் பாதுகாத்து, 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமொழி இயக்கத்தை' முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று என் முன்னே ஏராளமான மதிப்பிற்குரிய துறவிகளைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், அவர்களை மரியாதையுடன் வணங்குகிறேன். நாடு முழுவதிலும் உள்ள ஆன்மீக மற்றும் சமூக அமைப்புகள், தங்களது பக்தர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். வரவிருக்கும் 100 வாரங்களில், ஒவ்வொரு அமைப்பும் வாரத்திற்கு ஒரு முறை பொறுப்பேற்று, நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெரிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தால், நாம் எந்த அளவிலான மாபெரும் இயக்கத்தை உருவாக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த நற்பணிக்கு ஆசி வழங்கிய துறவிகள், ஆச்சார்யர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இதில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'மை பாரத்' அமைப்பின் தன்னார்வலர்களைப் பாராட்டுகிறேன் - அவர்கள் எதை நினைத்தாலும் அதைச் சாதித்துக் காட்டுபவர்கள். சமீபத்தில், இந்தியாவின் எல்லைக் கிராமங்களில் (ஒரு காலத்தில் "கடைசி கிராமங்கள்" என்று அழைக்கப்பட்ட, தற்போது பெருமையுடன் "முதல் கிராமங்கள்" என்று அழைக்கப்படும் இடங்களில்) ஒரு வாரம் செலவிட்ட சில தன்னார்வலர்களை நான் சந்தித்தேன். அவர்களின் அனுபவங்கள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தன. இன்று, அவர்கள் இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர், இது அவர்களின் விழிப்புணர்விற்கும் தேசப்பற்றிற்கும் சான்றாகும். அவர்களை நான் வாழ்த்தி வணங்குகிறேன்.

உங்கள் அனைவரின் கூட்டு முயற்சிகளால், இந்த இயக்கம் ஒவ்வொரு வீட்டை, ஒவ்வொரு இளம் நெஞ்சங்களைச் சென்று சேரும் என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து முன்னோக்கிச் செல்வோம். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

மிக்க நன்றி!

(பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான தமிழாக்கமாகும். அசல் உரை ஹிந்தியில் நிகழ்த்தப்பட்டது.)

(Release ID: 2293316)

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2307854) வருகையாளர் எண்ணிக்கை : 9