சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடி, வேலூர் சிஎம்சி ஆராய்ச்சியாளர்கள் சிறுநீரக நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கியுள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 1:21PM by PIB Chennai
சென்னை ஐஐடி - வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், உலகில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் சிறுநீரக நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பல்வேறு கருவிகளை உருவாக்கியுள்ளனர்.
மொத்தம் 3 தொழில்நுட்பங்களை இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். முதலாவதாக, மருத்துவ மற்றும் ஆய்வகத் தகவல்களைப் பயன்படுத்தி நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தைக் கணிக்கும் இயந்திரக் கற்றல் மாதிரியாகும். இரண்டாவதாக, சிடி-ஸ்கேன் படங்களைத் தானாகப் பகுப்பாய்வு செய்து அவற்றை இயல்பான சிறுநீரகம், சிறுநீரகநீர்க்கட்டி, சிறுநீரகக்கல், சிறுநீரகக்கட்டி என 4 வகைகளாக வகைப்படுத்தும் உள்நோக்கிய கற்றல் அமைப்பாகும். மூன்றாவதாக, சிடி-ஸ்கேன் படங்களிலிருந்து சிறுநீரகத்தின் 3டி உருவத்தை மீண்டும் உருவாக்கி, கட்டியின் அளவையும், சிறுநீரகத்தில் கட்டி எத்தனை சதவீதம் பாதித்துள்ளது என்பதையும் துல்லியமாக மதிப்பிடும் 3டி தளம் ஆகியவையாகும்.
இத்தொழில்நுட்பங்கள் முக்கியமான சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சிறுநீரகநோய்கள் ஆரம்பக் கட்டத்தில் பெரும்பாலும் அறிகுறியின்றி காணப்படுகின்றன. இதனால், குறிப்பிடத்தக்க அளவில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே நோய் கண்டறியப்படுகிறது. குறிப்பாக, மருத்துவர்களுக்கு விரைவாகவும் சீரான முறையிலும் முடிவுகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பெரிதும் உதவுகின்றன. இதன்மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதன் தீவிர வளர்ச்சியைத் தாமதப்படுத்துவதுடன், டயாலிசிஸ் சிகிச்சைக்கான தேவையையும் தவிர்க்க முடியும்.
சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜி எல் சாமுவேல், ஆராய்ச்சி மாணவி செல்வி ஜெனிஃபர் டிலைட்டா ஆகியோர் இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்தனர். சிஎம்சி வேலூர் சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சந்தோஷ் வர்கீசுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

***
SS/IR/GS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306436)
வருகையாளர் எண்ணிக்கை : 14