சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அலுமினிய சமையல் பாத்திரங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 10:56PM by PIB Chennai
குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமைச் செயல் குழுமம் மற்றும் ஃப்யூர் எர்த் இந்தியா இணைந்து 2026 ஆகஸ்ட் 27 அன்று சென்னை, எழும்பூரில் “ஈயம் கலக்காத பாதுகாப்பான அலுமினியச் சமையல் பாத்திரங்களை ஊக்குவித்தல்: உற்பத்தித் தரநிலைகள், சான்றளிப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை இதில் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியில் அலுமினிய சமையல் பாத்திர உற்பத்தியாளர்கள், தொழில் துறை பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பல்வேறு செயல் பங்குதாரர்கள் கலந்து கொண்டு இந்திய தரநிலைகள், பிஐஎஸ் சான்றிதழ், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநரும் தலைவருமான திரு எஸ் டி தயானந்த், அலுமினிய சமையல் பாத்திரங்களின் தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐஎஸ் 1660 இந்திய தரநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உற்பத்தியாளர்கள் உற்பத்தி செயல்முறைகளில் நச்சுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அலுமினிய சமையல் பாத்திரங்களுக்கு பொருந்தக்கூடிய தரக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்க பிஐஎஸ் சான்றிதழ் பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். தரக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்திற்கு அரசு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2026 அக்டோபர் 1 முதல், சிறு நிறுவனங்களுக்கு 2027 ஜனவரி 1 முதல் மற்றும் குறு நிறுவனங்களுக்கு 2027 ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் விளக்கினார். இந்த இடைக்கால அவகாசத்தை பயன்படுத்தி பிஐஎஸ் சான்றிதழைப் பெற்று, தொடர்புடைய இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி செயல்முறைகளை மாற்றிக் கொள்ளுமாறு உற்பத்தியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், மேற்கண்ட தேதிகளுக்குப் பிறகு, பிஐஎஸ் உரிமம் மற்றும் ஐஎஸ்ஐ குறியீடு இல்லாத அலுமினிய சமையல் பாத்திரங்களை உற்பத்தி செய்யவோ, இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகம் செய்யவோ முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
****
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304112)
வருகையாளர் எண்ணிக்கை : 4