இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 7:31PM by PIB Chennai

இந்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைமை அலுவலகமான சிஏஜி-யும், சென்னையில் இந்திய தொழில்நுட்பக் நிறுவனமும் (ஐஐடி மெட்ராஸ்), இணைந்து டிஜிட்டல் அமைப்புகளின் தணிக்கைக்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளன. அரசு, நிறுவன அமைப்புகளை டிஜிட்டல் முறையில் தணிக்கை செய்வதற்கான திறனை வளர்க்கும் விதமாக உச்ச தணிக்கை அமைப்பான சிஏஜி, முதல் முறையாக பிரத்யேகமாக உருவாக்கியுள்ள சான்றிதழ் பயிற்சித் திட்டம் இதுவாகும்.

டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் தளங்கள், தரவு சார்ந்த சேவைகள் ஆகியவற்றை அரசுகளும், நிறுவனங்களும் அதிக அளவில் சார்ந்துள்ளன. இதன் காரணமாக சிக்கலான டிஜிட்டல் அமைப்புகளை தணிக்கை செய்வதற்கான திறனுடைய நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தேவையான திறன்களை அதிகரிக்க சிஏடிஎஸ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (27-08-2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று நிலைகளைக் கொண்ட சிஏடிஎஸ் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ‘அடிப்படை நிலை’ சான்றிதழ் படிப்பை ஸ்வயம் பிளஸ் தளம் வாயிலாக இந்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி திரு கே சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு கே சஞ்சய் மூர்த்தி கூறும்போது, அரசு நிர்வாகம் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில், அந்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் திறன் தணிக்கைத்துறைக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது என்றார். அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும், நல்லாட்சி முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதற்கும் இந்தத் திறன், தணிக்கைத் துறைக்கு அவசிய தேவையாகும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் டிஜிட்டல் அமைப்புகளைத் தணிக்கை செய்வோருக்கு சிஏடிஎஸ் சான்றிதழ் கட்டாயத் தேவையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
****
SS/PLM/SH