சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகம், ஆழ்கடல் அகழாய்வுத் தொழில்நுட்பங்களை உருவாக்க தேசிய 'டெக்னோத்தான்' போட்டியை நடத்துகிறது
प्रविष्टि तिथि:
03 AUG 2026 9:40PM by PIB Chennai

இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி), ஆழ்கடல் அகழாய்வுத் தொழில்நுட்பங்களை உருவாக்க, தேசிய 'டெக்னோத்தான்' போட்டியை நடத்துகிறது. மத்திய புவி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் ஐஐடி மெட்ராசின் பேராசிரியர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் இன்று (03 ஆகஸ்ட் 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனைத் துவக்கிவைத்தார். என்ஐஓடி கடல் வளங்களை நீடித்த முறையில் ஆராய்வதற்கும் பயன்படுத்துவதற்குமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆழ்கடல் அகழாய்வுத் தொழில்நுட்பங்கள், நீருக்கடியிலான அமைப்புமுறைகள், பெருங்கடல் கண்காணிப்பு, கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கடலோர பொறியியல் உள்ளிட்ட 'ஆழ்கடல் திட்டத்தின்' முக்கிய நோக்கங்களை செயல்படுத்துவதில் இந்நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

ஆழ்கடலில் உள்ள பல் உலோகத் தாதுப் படிமங்களை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் எடுப்பதற்கான புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில், தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகம் வாயிலாக புவி அறிவியல் அமைச்சகம் தேசிய அளவிலான 'டெக்னோத்தான்' போட்டியை அறிவித்துள்ளது. இது, உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களை விரைவுபடுத்துவதையும், இந்தியாவின் 'ஆழ்கடல் திட்டம்' மற்றும் மீள்தன்மையுடைய ‘கடல்சார் பொருளாதார' தொலைநோக்கு இலக்குக்கு தேவையான புதுமைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆழ்கடல் பல் உலோகத் தாதுப் படிமங்கள் என்பவை, மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புமுறைகள், மேம்பட்ட மின்கலன்கள் மற்றும் உயர்-தொழில்நுட்ப உற்பத்திகளுக்கு அத்தியாவசியமான நிக்கல், கோபால்ட், செம்பு மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களின் முக்கியமான ஆதாரமாகும். இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் இந்தியா தனது ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நம்பிக்கையான, ஆற்றல் திறன்மிக்க, சுற்றுச்சூழலை பாதிக்காத மற்றும் பொருளாதார ரீதியாகச் சாத்தியமான அகழாய்வுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவது தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
4,500 முதல் 6,000 மீட்டர் வரையிலான ஆழ்கடல் சூழல்களில் இயங்கக்கூடிய முக்கியமான பொறியியல் தீர்வுகளை முன்மொழிய புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறையினர், குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
பங்கேற்பாளர்கள் பின்வரும் இரண்டு பிரிவுகளின் கீழ் புதுமையான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்:
செங்குத்து மேலெழும் கடத்து அமைப்புடன் கூடிய குறைந்த பாதிப்பைக் கொண்ட புதுமையான தாதுப் படிம சேகரிப்பு முறை.
செங்குத்து மேலெழும் கடத்து அமைப்பு இல்லாத, குறைந்த பாதிப்பைக் கொண்ட புதுமையான தாதுப் படிம சேகரிப்பு முறை.
இந்த 'டெக்னோத்தான்' இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், பங்கேற்பாளர்கள் கருத்துரைகள், அடிப்படை வடிவமைப்பு, அமைப்புமுறையின் கட்டமைப்பு, கண்டுபிடிப்பின் தனித்துவம் பற்றிய மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதைகளைச் சமர்ப்பிப்பர். தேர்வு செய்யப்படும் முன்மொழிவுகள் இரண்டாம் கட்டத்திற்குச் செல்லும். அதில் விரிவான திட்ட அறிக்கை, பொறியியல் வடிவமைப்புகள், மாதிரி உருவகப்படுத்துதல்கள், கணித மாதிரிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், முன்மாதிரி உருவாக்கத் திட்டங்கள் மற்றும் வணிகமயமாக்கல் உத்திகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆழ்கடல் அகழாய்வு மற்றும் உத்திசார் தாதுக்களைப் பிரித்தெடுப்பதில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க, நாட்டின் அறிவியல் சமூகம், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
பொறுப்பான பெருங்கடல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஆழ்கடல் வள மேம்பாட்டிற்கான நீடித்த மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பை இந்த 'டெக்னோத்தான்' குறிக்கிறது.
மேலும் உலக ஆழ்கடல் ஹேக்காதான் போட்டியை, ஆழ்கடல் இயக்கத்தின் இயக்குநர் எம். வி. ரமணமூர்த்தி துவக்கிவைத்தார். ஆழ்கடல் ஒலிம்பியாட் இந்தியா 2026 போட்டியை இந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள், தொழில்துறையினர், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
***
AD/SE
(रिलीज़ आईडी: 2294099)
आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English