சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மரில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 9:59PM by PIB Chennai

உலக தாய்ப்பால் வாரம் 2026-ஐ முன்னிட்டு, ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (JWCH) இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியுடன், ஒரு வார காலம் நடைபெறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

  

இந்த ஆண்டிற்கான உலக தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து "நிலையான வாழ்க்கை தொடக்கத்திற்காக தாய்ப்பால் – சிறப்பாக செயல்பட்டு வரும் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவோம்" (Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works) என்பதாகும்.

இந்த நிகழ்ச்சிகளை ஜிப்மர் செவிலியர் கல்லூரியின் செவிலியர் துறை, பச்சிளம் குழந்தைகள் நலத் துறை (Neonatology), குழந்தைகள் நலத் துறை (Paediatrics), மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறை (Obstetrics & Gynaecology) ஆகிய துறைகளுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை நடத்துகிறது.

விழிப்புணர்வு பேரணியை ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் (Medical Superintendent) டாக்டர் சாகா வினோத்குமார் மற்றும் ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத் துறையின் பேராசிரியர் டாக்டர் அதிசிவம் பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணியில் பேராசிரியர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, பதாகைகளை ஏந்தியவாறு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். குறிப்பாக, குழந்தை பிறந்த உடனேயே தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், முதல் ஆறு மாதங்களுக்கு முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அதனைத் தொடர்ந்து சரியான இணை உணவுகளுடன் தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செய்தி வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சகா வினோத்குமார் மற்றும் டாக்டர் ஆதிசிவம் தாய்ப்பால் குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்தினை வழங்குவதுடன், பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என்றும், குழந்தையின் ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சியை உறுதிசெய்கிறது என்றும் தெரிவித்தனர். மேலும், தாய்ப்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் நீண்டகால ஆரோக்கியத்திற்கும் பெரும் நன்மைகளை அளிப்பதாகவும், ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுக்க ஏதுவான சூழலை உருவாக்குவதற்கு மருத்துவப் பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி வாரம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மகப்பேற்றிற்குப் பிந்தைய தாய்மார்களுக்கான சுகாதாரக் கல்வி நிகழ்ச்சிகள், சுவரொட்டி மற்றும் கோலப் போட்டிகள், விழிப்புணர்வு நாடகங்கள், திறந்த கலந்துரையாடல்கள் (Open House), வில்லுப்பாட்டு, செவிலியர்களுக்கான வினாடி-வினா போட்டிகள், முதுநிலை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  

***

TV/RJ


(रिलीज़ आईडी: 2293169) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English