சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்திய வனப் பணிப் பயிற்சி அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவிற்கு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2026 1:26PM by PIB Chennai
டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் பயிற்சி பெற்ற 2024 தொகுதி இந்திய வனப் பணிப் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா, இன்று (01.08.2026) வன ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தேர்ச்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளுக்குச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், அதிகாரிகள் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக வாழ்த்து தெரிவித்தார். இந்த அதிகாரிகள் தங்கள் தொழில் வாழ்க்கையின் மிகவும் பயனுள்ள கட்டத்தை அடையும்போது, இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதிலும் வழிநடத்துவதிலும் இவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பாலைவனமாதல் உள்ளிட்ட பெரும் சவால்கள் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடும் என்று அமைச்சர் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்ள, புத்தாக்கம், நவீன தொழில்நுட்பம், மக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு, பிற மேம்பட்ட தொழில்நுட்பங்கள், தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு மட்டுமல்லாமல், மனித உணர்வுகளுடன் கூடிய நடைமுறைத் தீர்வுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.
2024-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த 109 இந்திய வனப் பணிப் பயிற்சி அதிகாரிகள், பூட்டானைச் சேர்ந்த இரண்டு பயிற்சி அதிகாரிகள் உட்பட மொத்தம் 111 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292908®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2293069)
வருகையாளர் எண்ணிக்கை : 53