சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மின்-கழிவு மேலாண்மை தொடர்பாக பிஐஎஸ் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 9:14PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் மற்றும் மின்-கழிவு மேலாண்மையுடன் தொடர்புடைய உற்பத்தித் தொழில்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த செயல் பங்காளர்கள் பங்கேற்ற ‘மின்-கழிவு மேலாண்மை – வழிகாட்டுதல்கள்’ (E-Waste Management — Guidelines) என்ற தலைப்பிலான ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை ஜூலை 30, 2026 அன்று சென்னை பிஐஎஸ் கிளை அலுவலகத்தில் நடத்தியது. மின்-கழிவுகளை சேமித்தல், சேகரித்தல், புதுப்பித்தல், பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் ஐஎஸ் 17862:2026, மின்-கழிவு மேலாண்மை – வழிகாட்டுதல்கள் (முதல் திருத்தம்) என்ற இந்திய தரநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செயல் பங்காளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
பங்கேற்பாளர்களை வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்த பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–E/ இயக்குனர் திரு.முனிநாராயணா, தரநிலையாக்க செயல்முறையில் செயல் பங்காளர்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியானது செயல் பங்காளர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும், உற்பத்தியாளர்கள், தரநிலைகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் தொடர்புடைய பிற செயல் பங்காளர்கள் இந்திய தரநிலைகள் குறித்து கலந்துரையாடவும், தங்களது நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளை வழங்கவும் இது வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய செயல் பங்காளர்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், தொழில்துறையின் தேவைகள் மற்றும் தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களுக்கு ஏற்ப தரநிலைகள் தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியின் மூலம் தரநிலைகள் உருவாக்கம் மற்றும் அவற்றை நடைமுறையில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, தரநிலையாக்க செயல்முறையை செயல் பங்காளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மின்-கழிவு மேலாண்மை – வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் விரிவான கலந்துரையாடலை பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு.ஹிதேஷ் யாதவ் நடத்தினார். 2022-ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட தரநிலையின் முதல் திருத்தமாக உருவாக்கப்பட்டுள்ள ஐஎஸ் 17862:2026 தரநிலையின் முக்கிய அம்சங்கள் குறித்து இவ்வமர்வில் விளக்கப்பட்டது. ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட இத்தரநிலை, மின்-கழிவு சேமிப்பு, சேகரிப்பு, புதுப்பித்தல், பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றுடன், மேம்பட்ட மறுசுழற்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு செயல்முறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மின்-கழிவுகளை மேலாண்மை செய்வதையும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் தொடர்புடைய அறிவிப்புகளுக்கு இணங்க இத்தரநிலையை செயல்படுத்துவதையும் இத்தரநிலை வலியுறுத்துகிறது.
மின்-கழிவு மேலாண்மை சங்கிலியில் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற செயல் பங்காளிகளின் பொறுப்புகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் பொறுப்பு அமைப்புகள், புதுப்பிப்பாளர்கள், பிரித்தெடுப்பாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் ஆகியோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மின்-கழிவுகளை சேமித்தல், சேகரித்தல், போக்குவரத்து செய்தல், பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான உரிய அமைப்புகளை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் என இத்தரநிலை வலியுறுத்துகிறது. மேலும், மொத்த நுகர்வோர், மின்-வணிக நிறுவனங்கள், பெரிய சில்லறை விற்பனை சங்கிலிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை மையங்கள் உள்ளிட்ட மின்-கழிவு உருவாக்கும் நிறுவனங்கள், தங்களது மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட புதுப்பிப்பாளர்கள் அல்லது மறுசுழற்சியாளர்களிடம் மட்டுமே அனுப்புவதையும், உரிய பதிவுகளைப் பராமரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுசுழற்சி மையங்கள் பாதுகாப்பான மற்றும் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட செயல்முறைகள், உரிய மாசுக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பணியாளர்கள் மற்றும் பொருத்தமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பராமரிக்க வேண்டும் என்றும் இத்தரநிலை வலியுறுத்துகிறது. மேலும், உருவாகும், சேமிக்கப்படும், சேகரிக்கப்படும், புதுப்பிக்கப்படும், பிரித்தெடுக்கப்படும், மறுசுழற்சி செய்யப்படும் மற்றும் இறுதியாக அகற்றப்படும் மின்-கழிவுகள் தொடர்பான பதிவுகளைப் பராமரிப்பதற்கும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் EPR இணையதளத் தேவைகளுக்கு ஏற்ப தொடர்புடைய தரவுகளைப் பராமரிப்பதற்கும் இத்தரநிலை வழிவகுக்கிறது.
நிகழ்ச்சியின் நிறைவாக, கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பகிர்வு அமர்வுடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.
*
TV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2292123)
வருகையாளர் எண்ணிக்கை : 48