சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

“எம்எஸ்எம்இ இணைப்பு 2026-திருச்சிராப்பள்ளி” ஜூலை 31 அன்று தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 30 JUL 2026 11:51AM by PIB Chennai

எம்எஸ்எம்இ இணைப்பு 2026-திருச்சிராப்பள்ளி” என்ற தலைப்பில் தேசிய அளவிலான வாங்குவோர் விற்போர் மேம்பாட்டு நிகழ்வும் தொழில் கண்காட்சியும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் ஜூலை 31, ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய சிறுதொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, திருச்சி வட்டாரக் குறு, சிறு தொழில் சங்கங்களோடு இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது

மத்திய அரசின் பொதுக் கொள்முதல் கொள்கை 2012-ன் படி, அரசு நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் கொள்முதலில் 25%  குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெற வேண்டும். உள் ஒதுக்கீடாக 4% பழங்குடி மற்றும் பட்டியலினத்தவரால் நடத்தப்படும் குறு சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்தும் 3% பெண் தொழில் முனைவோரிடமிருந்தும் பெற வேண்டும். இந்தக் கொள்கை குறித்து விழிப்புணர்வை பரவலாக்கம் செய்து குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு நிலையான மற்றும் கூடுதலான சந்தை வாய்ப்புகளை பெருக்குவதுதான் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

கொள்முதல் செய்யும் பொதுத் துறை நிறுவன அதிகாரிகளோடு நேரடி சந்திப்பு, புதிய சந்தை வாய்ப்புகளை இனம் காணுதல், அரசுக் கொள்முதல் முறைகள் பற்றிய கருத்தரங்குகள், பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்ளுதல் என்பவை இந் நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.

பெல்-திருச்சி, தெற்கு ரயில்வே - திருச்சி கோட்டம், சிபிசிஎல், இஸ்ரோ, ஐஆர்சிடிசி, இந்தியா போஸ்ட், என்ஐடி – திருச்சி, சிறுதொழில் வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு தொழில் முதலிட்டுக் கழகம் போன்ற அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள்  இந்நிகழ்வில் பங்கேற்பார்கள்.

திருச்சி வட்டாரத்தைச்  சார்ந்த தொழில்முனைவோர், தொழில் செய்ய ஆர்வமாக உள்ளவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என 2000-க்கும் அதிகமானோர்  இந்த 2 நாள் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

***

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2291553) आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English