சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சமத்துவம், பொருளாதார தன்னிறைவு மற்றும் தேச வளர்ச்சியின் தூணாக வருமான வரி திகழ்கிறது வருமான வரி தின கொண்டாட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன் பேச்சு
प्रविष्टि तिथि:
24 JUL 2026 6:12PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகத்தின் சார்பில், 167-வது வருமான வரி தினம் ஜூலை 24 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வருமான வரித்துறையின் சிறப்பான பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும், திறமையான வரி நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோருக்கான சேவைகள் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் வருமான வரித் துறை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறையின் முதன்மைத் தலைமை ஆணையர் திரு சுனில் பாஜ்பாய் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர், கடந்த நிதியாண்டில் (2025-26) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் ₹1,29,200 கோடி என்ற பட்ஜெட் இலக்கை விஞ்சி, ₹1,41,546 கோடி நிகர வரி வசூலை எட்டியுள்ளதாகவும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ₹12,000 கோடிக்கும் அதிகம் என்றும் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆண்டை விட 14.2% என்ற ஆரோக்கியமான வளர்ச்சியை இம் மண்டலம் பதிவு செய்துள்ளதாகவும், இதில் நிறுவன வரி வசூல் 28.83% அதிகரித்துள்ளதாகவும், மொத்த வரி வசூல் ₹1,68,700 கோடியைக் கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நிலுவைத் தொகை கோரிக்கையை வருமான வரித் துறை சுமார் ₹49,000 கோடி அளவுக்குக் கணிசமாகக் குறைத்தது என தெரிவித்தார்.

இந்த சாதனைகளுக்காக வருமான வரி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் என தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்தச் சாதனைகள், வருமான வரித் துறையானது ஒரு நவீன, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் வரி செலுத்துவோரை மையமாகக் கொண்ட அமைப்பாக மாறியுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

மேலும், வரி செலுத்துவோர் நேர்மையுடன் வரி செலுத்தும்போது, வரி பிடித்தம் செய்பவர் சட்டப்பூர்வக் கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றும்போது, வரி நிபுணர் வரி செலுத்துவோர் சட்டத்திற்கு இணங்கி நடக்க உதவும்போது, மற்றும் ஒரு அதிகாரி அச்சட்டத்தை நியாயமாகவும் திறமையாகவும் செயல்படுத்தும்போது, இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொதுவான தேசிய 'யாகத்தில்' பங்கேற்கிறார்கள் என்றும், அந்த யாகத்தின் விளைவால் நமது தேசமே பயனடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, சேவைக்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான ஒலி-ஒளி காட்சி விளக்கமும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் உரையாற்றுகையில், நாட்டின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் வருமான வரித்துறையைப் பாராட்டினார். 1860-ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்தியாவில் நவீன வருமான வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 166 ஆண்டுகளில், வருமான வரித்துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. காலனித்துவக் காலத்தில் வளங்களைச் சுரண்டுவதற்கான ஒரு கருவியாகத் தொடங்கப்பட்ட இது, சுதந்திர இந்தியாவில் சமூகச் சமத்துவம், பொருளாதார தன்னிறைவு மற்றும் தேசிய மேம்பாடு ஆகியவற்றின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது.
பண்டைய இந்தியாவில், நல்லாட்சி மற்றும் நிர்வாகத்தின் முதுகெலும்பாக கருவூலம் திகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். வருமான வரித்துறையின் ஒவ்வொரு அதிகாரியும் அலுவலரும் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் மனிதநேயத்துடன் தங்கள் கடமைகளை ஆற்றுவதன் மூலம், தேசத்தை வலுப்படுத்துவதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் ஒரு புனிதமான சேவையைச் செய்து வருகின்றனர் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டுகளில் நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சார்ந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் திகழ்ந்ததற்காக வருமான வரித்துறையை துணைநிலை ஆளுநர் பாராட்டினார். வருமான வரித் துறை புதுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையான நிர்வாகம் ஆகியவற்றில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்துறை செயல்படுத்திய சீர்திருத்தங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பிற அரசுத் துறைகளும் மாநில அரசுகளும் பின்பற்றலாம் என்று குறிப்பிட்டார். பல வளர்ந்த நாடுகள் தங்கள் வரி வசூல் அமைப்புகளில் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா வலுவான, திறமையான மற்றும் சிறப்பாகச் செயல்படக்கூடிய வரி நிர்வாக அமைப்பை நிறுவியுள்ளது என்றும் துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டார். தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் வரிச் சூழலை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக வருமான வரித்துறையை அவர் பாராட்டினார்.
வருமான வரிச் சட்டம், 2025-ன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், 2026, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருமான வரிச் சட்டம், 1961-க்கு மாற்றாக வருமான வரிச் சட்டம், 2025 நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். எளிமையான, மிகுந்த வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் வரி செலுத்துவோருக்கு உகந்த வரி முறையை உருவாக்குவதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த 65 ஆண்டுகளில் இந்தியாவின் நேரடி வரிச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முழுமையான மறுசீரமைப்பு இது என்று அவர் விவரித்தார்.
வருமான வரித் துறையின் முதன்மைத் தலைமை ஆணையரின் தலைமையிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஒட்டுமொத்தக் குழுவினரின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளாலும், 2025-26 நிதியாண்டில் இத்துறை மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். திறமையான வரி நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோருக்கான சேவை ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பின் மூலம், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான ஒரு முன்மாதிரியை இம்மண்டலம் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், 2026–27 நிதியாண்டிற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை வருமான வரித்துறை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் முதன்மைத் தலைமை ஆணையரின் தொடர்ச்சியான தலைமையின் கீழ், இதுவரை இருந்த உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அனைத்து அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் வலியுறுத்தினார். செயல்பாட்டுச் சிறப்பில் வருமான வரித்துறை துறை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். வலிமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் முழுமையாக வளர்ச்சியடைந்த பாரதம் எனும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்லுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
தடகளம், இறகுப்பந்து (Badminton), லாண் டென்னிஸ், மேசைப்பந்து (Table Tennis), மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல், உடற்கட்டமைப்பு மற்றும் கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சர்வதேச அளவில் இந்தியாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இத்துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஆளுநர் கௌரவித்தார். அவர்களின் சிறப்பான விளையாட்டுச் சாதனைகள் மற்றும் இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய முன்மாதிரியான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
சென்னை, வருமான வரித் தலைமை இயக்குநர் (புலனாய்வு) திரு. அருண் சி. பாரத், இ.வ.ப. நன்றியுரை வழங்கினார்.
***
TV/RJ
(रिलीज़ आईडी: 2289311)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English