அணுசக்தி அமைச்சகம்
கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களில் அணுசக்தி தொழில்நுட்பப் பயிற்சிகள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:55PM by PIB Chennai
இந்தியாவில் அணுசக்தி அறிவியல், தொழில்நுட்பம், கதிர்வீச்சு பாதுகாப்புத் துறைகளில் திறமையான மனிதவளத்தை உருவாக்க அணுசக்தித் துறை விரிவான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், நாட்டின் பல்வேறு அணுமின் நிலையங்களில் இயங்கும் பயிற்சி மையங்கள் வாயிலாகப் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டு அணு மின் நிலையங்களிலும் அணுசக்தி தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கல்பாக்கத்தில் பட்டதாரி பொறியாளர்களுக்கான ஓராண்டுப் பயிற்சியில் 60 பேருக்கும், மேற்பார்வையாளர்களுக்கான ஒன்றரை ஆண்டுகள் பயிற்சியில் 25 பேருக்கும், தொழில்நுட்பப் பயிற்சியாளர்களுக்கான இரண்டாண்டுப் பயிற்சியில் 50 பேருக்கும் திறன் பயிற்சிகள் வழங்கும் திறன் உள்ளதாக கூறிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முறையே 80 பொறியாளர்கள், 60 மேற்பார்வையாளர்கள், 60 தொழில்நுட்பப் பயிற்சியாளர்களுக்குச் சேர்க்கை திறன் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பாபா அணு ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து மேற்கொண்டு வரும் சிறப்புத் திட்டங்கள் மூலம் இளம் அறிவியல் வல்லுநர்கள் உருவாக்கப்பட்டு அணுசக்தித் துறையில் பணியமர்த்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288293®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2288483)
आगंतुक पटल : 12