சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுயக் கணக்கெடுப்பு வசதி தமிழ்நாட்டில் ஜூலை 17 அன்று தொடக்கம்

प्रविष्टि तिथि: 16 JUL 2026 6:21PM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுயக் கணக்கெடுப்பு வசதி தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 17, 2026) தொடங்கவுள்ளதாக, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திரு சுந்தரேஷ் பாபு, ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இன்று (16.07.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதனைத் தெரிவித்த அவர், பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

16-வது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் 2026 ஏப்ரல் 01 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை மேற்கொள்ளப்படும் இக்கணக்கெடுப்பு பணிகளில் 1,50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், வலுவான கொள்கை உருவாக்கத்திற்கும் துல்லியமான தரவுச் சேகரிப்பு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

வீட்டுவசதிகள் குறித்த கணக்கெடுப்பின் போது வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும். இந்தத் தரவுகள் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடலுக்கு அடித்தளமாக விளங்கும். இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பான இது, தரவுகளின் துல்லியத்தன்மை, அதனை சேகரிக்கும் வேகம் ஆகியவற்றை மேம்படுத்தும் வரலாற்று மைல்கல்லாகும். காகிதப் பதிவேடுகளுக்குப் பதிலாக, நிகழ்நேரத் தரவுகளைச் சேகரிக்க பிரத்யேக மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த முழுமையான கட்டமைப்பை மக்கள் தொகை கணக்கெடுப்பு கண்காணிப்பு & மேலாண்மை அமைப்பு என்ற ஒருங்கிணைந்த இணைய தளம் நெறிப்படுத்தும்.

பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான சுய கணக்கெடுப்பு வசதி நாளை (2026 ஜூலை 17) முதல் ஜூலை 31 வரை  15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் https://se.census.gov.in/ என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் தங்களின் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதில் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின் ஒரு பகுதியாக மாறும் என்பதால், பொதுமக்கள் துல்லியமான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுயக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும். இந்த எண்ணை தங்களின் இல்லங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும். இந்த சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்கள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் வழக்கமான கணக்கெடுப்பில் பங்கேற்று விவரங்களை அளிக்கலாம். மக்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மொபைல் சாதனங்கள், சர்வர் நெட்வொர்க்குகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மோசடிகளைத் தவிர்க்க பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக அமையும். மேலும், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் கீழ் விரிவான டிஜிட்டல் கட்டமைப்புகளுடன் நடத்தப்படவுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் துணைத் தலைமைப் பதிவாளர் திரு ஜே லிங்கன் ஞானதாஸ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி ஜெ விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

***

VJ/SS/PD


(रिलीज़ आईडी: 2285448) आगंतुक पटल : 1216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English