பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிழக்குக் கடற்படைப் பிரிவில் இணைகிறது, உள்நாட்டில் தயாரான மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பல் மகேந்திரகிரி

प्रविष्टि तिथि: 10 JUL 2026 7:29PM by PIB Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ப்ராஜெக்ட் 17ஏ' ரகத்தைச் சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான 'மகேந்திரகிரி'யை (F38), இந்தியக் கடற்படை, 2026 ஜூலை 11 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கிழக்குக் கடற்படைப் பிரிவில்  இணைக்க உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இணைப்பு விழா, பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு மற்றும் போர்க்கப்பல்களை  உள்நாட்டிலேயே கட்டமைத்தல் ஆகிய இலக்குகளை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

 

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மும்பையைச் சேர்ந்த மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனத்தால் கட்டப்பட்ட  மகேந்திரகிரி, இந்தியாவின் முன்னணி மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பல்களின் நவீன பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மறைந்திருந்து தாக்குவதற்கான மேம்பட்ட அம்சங்கள், அதிகளவிலான தாக்குதல்களைத் தாங்கும் திறன், குறைவான ரேடார் தெரிவுநிலை மற்றும் உயர்நிலை தானியங்கி செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்தப் போர்க்கப்பல், போரின் அனைத்து பரிமாணங்களிலும் முழு அளவிலான கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ள மகேந்திரகிரி, தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் வெற்றியைப் பிரதிபலிப்பதுடன், இந்தியக் கப்பல் கட்டும் துறையின் வளர்ந்து வரும் திறனையும் பறைசாற்றுகிறது. இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகளில் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறைகளின் பரந்த வலையமைப்பு ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்புத் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

 

மகேந்திரகிரி கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் மின்னணுப் போர்முறை அமைப்புமுறைகளைக் கொண்டிருப்பதால், வான்வழி, கடல்மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், இந்தக் கப்பல் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283430&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2283509) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu