சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மும்மொழி தொழில்நுட்பக் கலைச்சொல் தொகுப்பு உருவாக்கம் குறித்த தேசிய அளவிலான துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் - சிஎஸ்ஐஆர் - கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 06 JUL 2026 6:17PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள, ஆறு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டத்தை, சென்னையில் உள்ள  சிஎஸ்ஐஆர் - கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறது. ஜூலை 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அந்த நிறுவனத்தின்  இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புது தில்லியில் உள்ள தொழில்நுட்பக் கலைச்சொல் ஆணையத்தின் உதவி இயக்குநர் திரு. தீபக் குமார் கலந்து கொண்டார். தொழில்நுட்பக் கலைச்சொல் உருவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை அவர்  வழிநடத்தி  வருகிறார்.

இக்கூட்டம், ஆங்கிலம், இந்தி, தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை கலைச்சொல் தொகுப்பை ஆய்வு செய்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கலைச்சொற்களை தரப்படுத்துவதும், அவற்றை துல்லியமாகவும், சீரானதாகவும் மாற்றியமைத்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை  வல்லுநர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அமைப்பதும், இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தப் பயிலரங்கில், முன்னணிப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள், மொழி வல்லுநர்கள், துறைசார் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். கூட்டு விவாதங்கள்,  நிபுணர்களின் ஆய்வுகள் மூலம், இந்திய மொழிகளில், தகவல் தொழில்நுட்பக் கருத்துகளைத் திறம்படப் பரிமாறிக் கொள்ள உதவிடும் வகையில், விரிவான, பயனாளர்-நட்பு தொழில்நுட்பக் கலைச்சொல் தொகுப்பை உருவாக்க இக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்திய மொழிகளில், உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கை, 2020-ன் தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் இணைந்துள்ளது. பிராந்திய மொழிகளில், அறிவியல்,தொழில்நுட்பக் கலைச்சொற்களை வலுப்படுத்துவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல், கருத்துசார் புரிதலை மேம்படுத்துதல், பல்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்குத் தரமான கற்றல் வளங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிபுணர் ஆலோசனைக் குழுவில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1)    பேராசிரியர் கேசவ மூர்த்தி, டீன், திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரப் பிரதேசம்

2)    பேராசிரியர் டி. விஷ்ணுகுமாரன், தமிழ்த் துறை, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்

3)    பேராசிரியர் வி. சரிதா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர், ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயம், திருப்பதி

4)    பேராசிரியர் கே. கணேசன், கணினி அறிவியல், பொறியியல், தகவல் அமைப்புகள் பள்ளி, வி.ஐ.டி, வேலூர்

5)    பேராசிரியர் ஒய். மணிகண்டன், தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

6)    பேராசிரியர் பி. எல். சித்ரா, பிணைய அமைப்புகள்,  தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

7)    பேராசிரியர் பி. செல்வகுமார், தமிழ், மொழி,  மொழியியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

8)    டாக்டர் வி. நிர்மலார் செல்வி, தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

9)    திரு ஆர். டி. சதீஷ் குமார், முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி, சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி, சென்னை

ஆறு நாட்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டம், தரப்படுத்தப்பட்ட பலமொழித் தொழில்நுட்பக் கலைச்சொற்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்றும், இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும் விரிவான தேசிய நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வின் முடிவுகள் கல்வி நிறுவனங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வளமாக அமையும். இதன் மூலம், இந்தியா முழுவதும், அறிவியல்,  தொழில்நுட்ப அறிவுக்கான நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.

****

TV/SV/SH

 


(रिलीज़ आईडी: 2281818) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English