சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
முப்பரிமாண கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 6:38PM by PIB Chennai

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், மெர்லின் ஆட்டோமேஷன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இடையே முப்பரிமாண கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான கூட்டுத் திட்டத்தின் தொடக்க ஆலோசனை அமர்வு, ஜூலை 1, 2026 அன்று சென்னை தரமணியில் நடைபெற்றது. இத்திட்டம், முப்பரிமாண அச்சிடும் பயன்பாடுகளுக்கு ஏற்ற சிறப்பு கான்கிரீட் கலவைகளை உருவாக்குவதையும், ஜி+1 (தரைத்தளம், ஒரு மேல் தளம் கொண்ட) முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட கான்கிரீட் கட்டிடங்களின் நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் முப்பரிமாண கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பான, விரிவான பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அறிவியல் அடித்தளம் வலுப்படுத்தப்படும். இக்கூட்டத்தின்போது, இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கான்கிரீட் முப்பரிமாண அச்சிடும் துறை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்தும், இத்தொழில்நுட்பத்தை மேலும் வர்த்தகமயமாக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். மேலும், கட்டுமானத் துறைக்கு இத்தொழில்நுட்பத்தை அதிக சாத்தியமுள்ளதாகவும், பலனளிப்பதாகவும், மாற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என். ஆனந்தவல்லி, "அதிநவீன ஆராய்ச்சிகளைத் தொழில்துறைக்கு ஏற்ற தீர்வுகளாக மாற்றுவதில் இந்த அமைப்பு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தக் கூட்டு முயற்சி பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார். முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கட்டிடங்களின் நிலநடுக்கத் தாங்கும் திறன் மதிப்பீடு என்பது, இந்திய கட்டுமானத் துறையில் அவற்றின் பாதுகாப்பான பயன்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமையும்," என்று அவர் கூறினார்.

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்துடனான இந்த கூட்டு முயற்சி, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு பொறியியல் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக மெர்லின் ஆட்டோமேஷன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரண்யா சுப்பிரமணியன் தெரிவித்தார். முப்பரிமாண முறையில் கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பத்தை சாத்தியக்கூறு நிலையிலிருந்து இந்தியாவில் பெரிய அளவிலான வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆலோசகர் (நிர்வாகம்) டாக்டர் பாரிவள்ளல், வணிகம், அறிவுசார் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் கே. சதீஷ் குமார், மேம்பட்ட பொருட்கள் ஆய்வகத் தலைவர் எஸ். பாஸ்கர், திட்டத்தின் தலைவர் பிரபாத் ரஞ்சன் பிரேம், திரு. விஜய பாஸ்கரா ஜி.எஸ்., மற்றும் திருமதி சித்ரா சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர். தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முப்பரிமாண கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பத்தின் உள்நாட்டு மேம்பாடு, வணிகமயமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, நீண்ட கால, பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த இரு அமைப்புகளும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280841®=3&lang=1
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2280909)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English