பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
23 MAY 2026 2:10PM by PIB Chennai
நண்பர்களே,
இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். இன்று 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். நீங்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான, பொறுப்புள்ள பங்காளிகளாக மாறுகிறீர்கள். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்கப் போகிறீர்கள். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நீங்கள் மிக முக்கியப் பங்காற்றுவீர்கள்.
நண்பர்களே,
இந்த நிலையை எட்டுவதற்கு, நீங்கள் நீண்ட தயாரிப்புகளையும் கடின உழைப்பையும் மேற்கொண்டிருக்க வேண்டும். உங்களின் இந்த சாதனைக்காக உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு உங்கள் பெற்றோரின் மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால், குடும்பம் மட்டுமல்ல—நாம் இங்கு வந்து சேருவதற்கு சமுதாயமும் ஒரு மிகப் பெரிய பங்காற்றுகிறது. நாம் நம்முடைய முயற்சியால் மட்டுமே அல்லது நம் குடும்பத்தால் மட்டுமே இங்கு வந்துவிடுவதில்லை. இந்த பரந்த நாட்டின் 140 கோடி குடிமக்களின் பங்களிப்பும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, நமது பொறுப்பு நமக்கும் நம் குடும்பத்திற்கும் மட்டும் சார்ந்தது அல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சம அளவில் சார்ந்தது ஆகும். இந்த அனைத்துப் பணிகளுக்கும் உங்களை நீங்கள் இன்னும் தகுதியானவர்களாக மாற்றிக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நண்பர்களே,
நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஐந்து நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது ஐந்து நாடுகள் மட்டுமாக இருந்தாலும், அந்த நேரத்தில் டஜன் கணக்கான நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடத்தினேன். எல்லா இடங்களிலும் நான் ஒரு பொதுவான விஷயத்தை உணர்ந்தேன்—உலகமே இந்தியாவின் இளைஞர்கள் குறித்தும், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறது. இன்று உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றன. இந்தியாவும் பல்வேறு நாடுகளுடன் கூட்டாண்மை அமைத்து வருகிறது. இந்தியாவின் இளைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை உறுதி செய்வதும், வேலைவாய்ப்புகளை வழங்குவதும், அவர்களின் திறமையை ஒளிரச் செய்வதுமே இதன் நோக்கமாகும். என் நாட்டு இளைஞர்கள் உலகளாவிய அனுபவத்தையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உதாரணமாக, இந்த அதிவேகப் பயணத்தின் போது, நெதர்லாந்துடன் செமி கண்டக்டர்களை நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறை குறித்து விவாதித்தோம்; ஸ்வீடன் நாட்டுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு குறித்தும்; நார்வேயுடன் பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும்; ஐக்கிய அரபு அமீரகத்துடன் உத்திசார் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைக்கான முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும்; மற்றும் இத்தாலியுடன் பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டோம்.
நண்பர்களே,
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நேரடியாக இந்தியாவின் இளைஞர்களுக்குப் பயனளிக்கும். இந்தத் துறைகள் அனைத்தும் இந்தியாவின் பிரகாசமான மற்றும் திறன்மிக்க எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தைக் கொண்டு வருகின்றன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு புதிய முதலீடும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கூட்டாண்மையும், ஒவ்வொரு தொழில்முறை ஒத்துழைப்பும் இந்தியாவின் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், எண்ணற்ற புதிய சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகிறது.
எனது இளம் நண்பர்களே,
நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்—அடுத்த மூன்று முதல் நான்கு தசாப்த கால உலகளாவிய வளர்ச்சியைத் தீர்மானிக்கப் போகும் தொழில்துறைகளை, இந்தத் துறைகளில் வரவிருக்கும் முதலீடுகளும் கூட்டாண்மைகளும் தான் வடிவமைக்கப் போகின்றன. மேலும், இதில் இந்தியாவின் இளைஞர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நண்பர்களே,
உலகிற்கு இந்தியா எவ்வாறு ஒரு நம்பகமான விநியோகத் தொடர் பங்காளியாக மாறி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உங்களில் பலருக்கு நெதர்லாந்தின் செமி கண்டக்டர் நிறுவனமான ஏஎஸ்எம்எல் பற்றித் தெரிந்திருக்கும். இந்த ஏஎஸ்எம்எல் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம் இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உலகிலுள்ள மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏஎஸ்எம்எல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் இடையேயான இந்த ஒரு ஒப்பந்தம், இந்தியாவில் எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கான நுழைவாயிலையும் திறந்து வைக்கும். அதேபோல், ஸ்வீடன் நாட்டுடனான தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மைகளும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான சூப்பர் கம்ப்யூட்டிங் ஒத்துழைப்பும் இந்தியாவின் தொழில்நுட்பத் திறனைப் பெரிதும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
இன்று, தூய்மையான ஆற்றல், முக்கியமான கனிமங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் நிலையான உற்பத்தி சார்ந்த துறைகள் மிக அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தத் துறைகளில் ஏற்படுத்தப்படும் கூட்டாண்மைகள் ஒரு புதிய பொருளாதாரத்திற்கும், புதிய நல்வாய்ப்புகளுக்குமான கதவுகளைத் திறந்து விடுகின்றன. ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன், பசுமை மாற்றம் மற்றும் நிலையான தொழில்நுட்பத்திற்கான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இது தூய்மையான உற்பத்தி சார்ந்த எதிர்காலத் தொழில்துறைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும்.
இத்துடன், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களிலும் இந்தியா மிக வேகமாக பணியாற்றி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நார்வேயுடன் மேற்கொள்ளப்படும் கூட்டாண்மைகள் இந்தியாவின் கப்பல் கட்டும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும். கப்பல் கட்டும் தொழிலுக்கு பெருமளவிலான திறமையான மனிதவளம் தேவைப்படும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதன் பொருள், இந்தியாவின் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயரும்; இது மிகப்பெரிய நல்வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
ஒவ்வொரு புதிய கூட்டாண்மையின் மூலமும், இந்திய புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் வல்லுநர்கள் உலகோடு இணைவதற்கான புதிய வழிகளை நாம் உருவாக்கி வருகிறோம். இது இந்திய இளைஞர்களுக்கு மேம்பட்ட நிபுணத்துவம், உலகளாவிய சந்தைகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய நல்வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். இன்று, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்கள், கட்டமைப்பவர்கள் மற்றும் பெரிய அளவில் திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பவர்களையே உலகம் மதிக்கிறது. இந்தியா இந்த மூன்று திசைகளிலும் மிக வேகமாக முன்னேறி வருகிறது; இந்த மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சக்தியே நீங்கள்தான்—எனது இளம் தோழர்களே, இந்தியாவின் இளைஞர்களே! நான் உலகத்தில் எங்குச் சென்றாலும், இந்தியாவின் இளைஞர்களின் சக்தி குறித்து விவாதிப்பதற்காகவே கணிசமான நேரத்தைச் செலவிடுகிறேன்.
நண்பர்களே,
இன்று ஒவ்வொரு இந்தியரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு பெரிய இலக்குடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்காக, நாடு பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. இந்த முதலீடு இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.
உதாரணமாக, செமி கண்டக்டர் உற்பத்திக்கான முழுமையான விநியோகத் தொடரை இந்தியா கட்டமைத்து வருகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் பத்து முக்கிய செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் உலக அளவில் முத்திரை பதிக்கும். இவை அனைத்தும் இந்தியாவின் இளைஞர்களின் திறன், புத்தி கூர்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் இயக்கப்படும்; இது இயல்பாகவே வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
அதேபோல், கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் முழுமையாகப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டமைப்பையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இதற்காக சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இதேபோல, விமானங்களை முறையாகப் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் முழுமையாகப் புதுப்பிப்பதற்கான ஒரு முழுமையான கட்டமைப்பை இந்தியாவிற்குள்ளேயே நாம் உருவாக்கி வருகிறோம். இது விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பெரிதும் ஆதரவாக இருப்பதோடு, இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புத் துறையையும் திறந்து வைக்கும்.
நண்பர்களே,
இந்தியா இன்று ஒரு முக்கிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. மின்னணு சாதன உற்பத்திக்கான முழுமையான மதிப்புத் தொடரை இந்தியாவிற்குள்ளேயே நாம் கட்டமைத்து வருகிறோம். உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம், நாட்டில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது; இதனால் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இதுபோன்ற பல திட்டங்களில், இந்தியாவின் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து பெருமளவிலான முதலீடுகளைச் செய்து வருகின்றன. இந்த முதலீடுகள் நாட்டிற்குள்ளேயே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, அவர்களின் கனவுகளையும் நனவாக்குகின்றன. நீங்கள் இப்போது உங்கள் பணி நியமனக் கடிதங்களைப் பெற்ற பிறகு, அரசு ஊழியர்கள் என்ற அடையாளத்தைச் சுமக்கப் போகிறீர்கள். தொழில் புரிவதை எளிதாக்குவது நமது நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் நீங்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. இதில் உள்கட்டமைப்பு மிக முக்கியப் பங்காற்றுகிறது. கிராமங்கள், சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் வளர்ச்சியோடு இணைக்கப்படும்போது, முன்னேற்றத்தின் பலன்கள் அதிக மக்களைச் சென்றடைகின்றன. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், தளவாடங்கள், துறைமுகங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.
இன்று நீங்கள் எந்த திசையிலும் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால், அங்கு இந்திய அரசின் ஏதேனும் ஒரு திட்டம் செயல்பாட்டில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். கிராமங்களும் கூட அதிவேக மாற்றத்தைக் கண்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்புகள் மூலம், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் மாணவர்களுக்குப் புதிய வழிகள் திறந்துள்ளன. இன்று லட்சக்கணக்கான குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர். சொல்லப்போனால், நாம் கட்டி வரும் வீடுகளின் எண்ணிக்கை பல நாடுகளின் மொத்த வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
அதுமட்டுமல்லாமல், எனது தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் மறக்க நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை; நானும் அதை மறப்பதில்லை, இதில் கழிப்பறைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன, நாமும் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சென்றடைந்துள்ளது. வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்படும் சூரிய சக்தி உள்கட்டமைப்பு, இந்தத் துறைக்கு பல புதிய விற்பனையாளர்களைக் கொண்டு வந்துள்ளது.
மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், குழாய்கள் வழியாக வீடுகளுக்குத் குடிநீர் சென்றடைகிறது. சமீபத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், நகரங்களில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்த நான் விரும்பியபோது, எனக்கு குழாய் பதிப்பவர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏனென்றால், பெரும்பாலான குழாய் பதிப்பவர்கள் ஏற்கனவே ஜல் ஜீவன் திட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். சில நேரங்களில் திறமையான மனிதவளத்திற்கான தேவை, அதன் விநியோகத்தை விட எவ்வாறு அதிகமாகிறது என்பதையும், நல்வாய்ப்புகள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதையும் இது காட்டுகிறது.
நண்பர்களே,
இந்த மாற்றங்களின் தாக்கம் வெறும் சாதாரண குடிமக்களின் வசதியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. கிராமங்களுக்குச் சாலைகள் செல்லும்போது, சந்தைகளுக்கான அணுகல் எளிதாகிறது. மேம்படுத்தப்பட்ட மின்சார வசதிகளால், சிறு தொழில்களும் வணிகங்களும் வளரத் தொடங்குகின்றன. கிராமங்களில்கூட, விவசாயத்தில் மதிப்புக்கூட்டுதல் சாத்தியமாகிறது. முன்னரெல்லாம் சிவப்பு மிளகாயை அப்படியே விற்றவர்கள், இப்போது மின்சார வசதி இருப்பதால் மிளகாய்த்தூள் தயாரித்து, அதை பாக்கெட் செய்து விற்கிறார்கள். இதன் மூலம், கிராமங்களில் உள்ள சிறு தொழில்கள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.
அதிகரித்து வரும் டிஜிட்டல் இணைப்புகள் மூலம், கிராம மக்கள் ஒட்டுமொத்த உலகத்துடனும் இணைந்து, நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான வேறுபாடு படிப்படியாக மறைந்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தின் வேகத்தை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும், நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன; ஆனால் அதற்கும் மேலாக, நாடு ஒரு புதிய சுயமரியாதையுடன் முன்னோக்கிச் செல்கிறது, மேலும் லட்சக்கணக்கான மக்கள் புதிய நல்வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
நண்பர்களே,
இன்று இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னோக்கிச் செல்வதற்கும், தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நல்வாய்ப்புகள் உள்ளன. நான் யாரையும் குறை கூறவில்லை, ஆனால் எல்லாமே மிக அதிவேகமாகவும், மிகப்பெரிய அளவிலும், பன்முகத்தன்மையுடனும் நடக்கிறது என்பதே உண்மை. உற்பத்தித் துறை, தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் சேவைகள், ரயில்வே, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை வரை பல துறைகளில் எண்ணற்ற நல்வாய்ப்புகள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.
முடிந்தவரை அதிகமான இளைஞர்கள் இந்த நல்வாய்ப்புகளால் பயனடைவதையும், நாட்டின் இளைஞர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் கிடைப்பதையும் உறுதி செய்வதே நமது முயற்சியாகும். அதனால்தான் திறன் மேம்பாடு, தொழில்துறையுடன் இணைந்த கல்வி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் பயிற்சி நிறுவனங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் சேது போன்ற திட்டங்கள் இந்த திசையில்தான் செயல்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
சமீபத்திய ஆண்டுகளில், நாட்டில் சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் சார்ந்த ஒரு புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. இந்தியா இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் கட்டமைப்பாகத் திகழ்கிறது. இந்த எண்ணிக்கையை நினைவில் கொள்ளுங்கள்—நாட்டில் 2,30,000-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் இளைஞர் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றம் பெரிய நகரங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை; இதுதான் எனக்கு மிகப்பெரிய திருப்தியைத் தருகிறது. இன்றைய நாட்களில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் புத்தொழில் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் உலகில் தங்களது திறமைகளைப் பெருமளவில் நிரூபித்து வருகிறார்கள். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றம் நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தில், நமது மகளிர் சக்தியின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, பெண்களால் வழிநடத்தப்படும் பெருமளவிலான புத்தொழில் நிறுவனங்கள் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. இந்தியாவில் உள்ள பெண்கள் புத்தொழில் நிறுவனங்களில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்கள் என்றும், அவர்கள் பெருமளவில் முன்னேறி வருகிறார்கள் என்றும் நான் உலகெங்கிலும் உள்ள மக்களிடம் கூறி வருகிறேன். முத்ரா திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான பெண்கள் நிதி உதவியைப் பெற்றுள்ளனர். பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடனுதவி திட்டம் போன்ற திட்டங்கள் லட்சக்கணக்கான பெண்களுக்குச் சுயசார்புடையவர்களாக மாறுவதற்கான நல்வாய்ப்பை வழங்கியுள்ளன. இன்று, கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் முன்னெப்போதையும் விட அதிகமான பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் புதிய தொழில்களைத் தொடங்கி வருகிறார்கள்.
நண்பர்களே,
இந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு மத்தியில், நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு அமைப்பின் உண்மையான வலிமையும் அதில் உள்ள மக்களிடம் தான் இருக்கிறது. மக்களின் சக்தி, அதாவது 'ஜன சக்தி' தான் நாட்டின் சக்தியாக மாறுகிறது. நீங்கள் இப்போது ஒரு அங்கமாக மாறவிருக்கும் இந்த அமைப்பு, லட்சக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையது ஆகும். அரசுப் பணிகள் என்பவை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு ஊடகமாகும். நீங்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், உங்களுடைய நடத்தை, சக மனிதர்கள் மீதான அக்கறை மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேசம் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இப்போது உங்கள் உழைப்பு, நடத்தை, பேச்சு மற்றும் செயல்பாடுகளின் மூலம் அந்த நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும். உங்களைச் சந்திப்பது குடிமக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்ட வேண்டும்; மேலும் அவர்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்ல ஊக்கமளிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு இளம் கர்மயோகியும் தங்களது பணியை ஒரு பொறுப்பாகப் பார்க்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, நீங்கள் இதையெல்லாம் விட மேலானவர்கள். முற்காலத்தில், ஆயிரம் கைகளைக் கொண்ட கார்த்தவீரிய அர்ஜுனன் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று, நீங்கள்தான் அரசாங்கத்தின் கைகள், அதன் வலிமை. ஏற்கனவே பணியில் இருப்பவர்களும், புதிதாகப் பணியில் சேருபவர்களும் இதில் அடங்குவர். இந்திய மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்து வருகின்றன; இதை வளர்ச்சியின் ஒரு நேர்மறையான அறிகுறியாகவே நான் பார்க்கிறேன். நமது மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொண்டு, அவற்றைப் பூர்த்தி செய்ய அதே வேகத்தில் உழைக்க வேண்டும். இதில், பொதுச் சேவையில் நுழையும் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், புதிய அமைப்புகள் மற்றும் புதிய தேவைகளுக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு 'ஐகாட் கர்மயோகி' (iGOT Karmayogi) தளம் உங்களுக்குப் பெரிதும் உதவும். 'கர்மயோகி பிராரம்ப்ப்' போன்ற பாடத்திட்டங்கள் உங்களது பொறுப்புகளை எளிதாகப் புரிந்து கொள்ள வழிவகை செய்யும். இந்த ஆதாரங்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, இந்தியாவின் இளைஞர்கள் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதே உத்வேகமும், அதே ஆற்றலும் பொதுச் சேவையிலும் வெளிப்பட வேண்டும். தங்களது பணியைத் தேசத்திற்கான சேவை, மக்களுக்கான சேவை என்று கருதும் இளைஞர்களின் முயற்சிகளால் தான் ஒரு வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும். மேலும், நமது பாரம்பரியத்தில் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெறும் இளம் தோழர்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்குப் புதிய வேகத்தைக் கொடுப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உங்களுடைய உழைப்பு மற்றும் முடிவுகளின் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கு நிறைவேறும். 'மக்களே தெய்வம்' என்ற நமது மந்திரத்தை நீங்கள் எப்போதும் மறந்துவிடக் கூடாது. குடிமக்களின் நலனே நமது கடமையாகும். இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து இளைஞர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும், தேசத்திற்குச் சேவை செய்யும் இந்த நல்வாய்ப்பை நிறைவேற்றுவதற்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான தமிழாக்கம் ஆகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
------
(Release Id : 2264473)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2280186)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam