பிரதமர் அலுவலகம்
பிரதமர் தலைமையில் 52-வது பிரகதி கூட்டம்: ரூ.30,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஆய்வு
प्रविष्टि तिथि:
24 JUN 2026 9:04PM by PIB Chennai
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, செயல்திறன் மிக்க நிர்வாகம், சரியான நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தகவல் தொடர்புத் தொழில் நுட்ப அடிப்படையிலான ‘பிரகதி’ அமைப்பின் 52-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
புதுதில்லி சேவா தீர்த்-ல் காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நான்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சாலை, மின்சாரம், தொழில்துறை வழித்தடங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள் ஆகிய சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்தார். பிராந்திய இணைப்பு, தொழில்துறை வளர்ச்சி, பொது மக்கள் நலன் சார்ந்த இத்திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் முடிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தாமதம் திட்டத்திற்கான செலவை அதிகரிப்பதோடு, மக்களுக்குச் சேர வேண்டிய நன்மைகளையும் தடுத்து நிறுத்துகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீவிரமாக கண்காணிப்பதுடன் விரைந்து தீர்க்குமாறு அறிவுறுத்தினார்.
திட்டங்களை திறம்பட திட்டமிடவும் செயல்படுத்தவும் ‘பிரதமரின் கதிசக்தி’ தேசிய பெருந்திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். உண்மை நிலவரங்களின் அடிப்படையில் முன்கூட்டியே தடைகளைக் கண்டறிந்து, துல்லியமான தரவுகளுடன் முடிவுகளை எடுக்க ஏதுவாக இணையதளத்தில் திட்ட விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, காசநோய் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். விழிப்புணர்வுப் பணிகளில் தேசிய மாணவர் படை மாணவர்கள், மை பாரத் தன்னார்வலர்களை ஈடுபடுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
சைபர் குற்றங்கள், டிஜிட்டல் கைது தொடர்பான புகார்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். டிஜிட்டல் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், வங்கிகள், டிஜிட்டல் தளங்கள், சட்ட அமலாக்க முகமைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். சைபர் மோசடி வழக்குகளில் விரைவான விசாரணைக்கும், நிதி இழப்பைத் தடுப்பதற்கும் ஏதுவாக 'இ-ஜீரோ எப்ஐஆர்' பதிவு செய்யும் முறையை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277582®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277594)
आगंतुक पटल : 13