சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கடல்சார் பாதுகாப்புத் திறன், துறைமுகப் பாதுகாப்பு குறித்த பயிற்சியை வலுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை - இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2026 6:59PM by PIB Chennai

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்துவதிலும், துறைமுகப் பாதுகாப்பு நிர்வாகத்தில் தொழில்முறைத் திறனை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவை 22.06.26 அன்று சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத் தலைமையகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம், கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, ஆலோசனை, துறைமுகம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டு முயற்சிகள் ஆகிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்க வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மேலும், கடல்சார் பாதுகாப்பில் தொழில்முறைச் சிறப்பு, துறைசார் நிபுணத்துவத்தை முன்னெடுப்பதில் இந்த இரண்டு முக்கிய அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை இது கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு சார்ந்த சிறப்புப் பயிற்சிகள், பணியாளர்களுக்கான பிற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த ஒத்துழைப்பு, கடல்சார், துறைமுகப் பாதுகாப்பின் வளர்ந்து வரும் துறைகளில் நிபுணத்துவப் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, பாடத்திட்ட மேம்பாடு, கல்விசார் ஆதரவு, அறிவுப் பகிர்வு ஆகியவற்றை எளிதாக்கும்.

இந்த ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில்,  பயிற்சிக்கான முதல் தொகுதி இன்று தொடங்கியது. இது உயர் பயிற்சி பெற்ற கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களின் குழுவை உருவாக்கும் நோக்கில், கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது.

கடல்சார் பாதுகாப்பில் சிறப்பு நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தொடர் முயற்சிகளின் அடிப்படையில், இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது. அண்மை ஆண்டுகளில், துறைமுகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்புப் பயிற்சித் தொகுதிகளை உருவாக்குதல், கல்வி, பயிற்சி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் கடல்சார் துறையில், இப்படை தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் 'மகாசாகர் சிமுலேட்டர் ஆய்வகம்' திறக்கப்பட்டதும், துறைமுகப் பாதுகாப்பு உதவியாளர்  பயிற்சித் தொகுதிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும், நாட்டிற்கான ஒரு விரிவான கடல்சார் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மூத்த அதிகாரிகள், இந்த ஒப்பந்தம்  செயல்பாட்டு அனுபவம், கல்விசார் சிறப்பம்சங்களின் சங்கமமாக அமைகிறது என்பதை வலியுறுத்தினர். முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதிலும், பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்துவதிலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, பல தசாப்த கால நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சிறப்பு கடல்சார் அறிவு, ஆராய்ச்சித் திறன்கள்,  கல்விசார் வளங்களை வழங்குகிறது. துறைமுகம், கப்பல் போக்குவரத்துத் துறைகளில் எழும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான கடல்சார் பாதுகாப்புப் பணியாளர் படையை உருவாக்குவதை இவ்விரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்த நோக்கமாகக் கொண்டுள்ளன.

துறைமுகப் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துதல், பாதுகாப்பான கடல்சார் வர்த்தகத்தை ஆதரித்தல், நாட்டின் விரைவாக வளர்ந்து வரும் கடல்சார் உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதற்கான திறன்மிக்க தொழில்முறைப் பாதுகாப்புப் பணியாளர் குழுவை உருவாக்குதல் ஆகிய இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2277214) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English