சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 6:33PM by PIB Chennai
4R0P.jpeg)
சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் “ஆரோக்கியமான முதுமைக்காக யோகா” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது.
ஜூன் 15 முதல் 21 வரை நடைபெற்ற வாராந்திர யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மூன்று யோகா அமர்வுகள், ஒரு யோகா சங்கம நிகழ்வு நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகள் மூலம் நோயாளிகள், பொதுமக்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ‘யோகா சங்கமம்’ ஜூன் 21 அன்று காலை 7.00 மணி முதல் 7.45 மணி வரை, சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குநர் என் ஜே முத்துகுமார், பொறுப்பு அலுவலர் கனகராஜன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனம் செய்தனர். அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயந்தி தொடக்க உரையாற்றி, நவீன சுகாதாரப் பராமரிப்பில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அதிகாரி (சித்தா) டாக்டர் சி அன்பரசி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, முதியோரின் உடல்-மனநல மேம்பாட்டில் யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.
UT6Y.jpeg)
யோகாசன நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே யோகா, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 3 கிலோமீட்டர் தூர “யோகாவிற்கான ஓட்டம்” நடத்தப்பட்டது. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்திலிருந்து சாந்தி காலனி வரை நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
யோகா, சித்த மருத்துவத்தை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான முதுமை, உடல் நலத்தை பெறுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியதாக சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2276775)
வருகையாளர் எண்ணிக்கை : 69