சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார்
யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக்கிக் கொள்ள அமைச்சர் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 1:07PM by PIB Chennai
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று (21 ஜூன் 2026) கலந்துகொண்டு சிறப்பித்தார்.


இந்தியா தொல்பொருள் ஆய்வுத்துறை, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணைந்து இந்த யோகாதின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பல்வேறு யோகாசனங்களைச் செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சருடன் இந்தியக் கடற்படையினர், விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், செங்கல்பட்டிலுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், பொதுமக்கள், சிறார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசனங்களைச் செய்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா 365 எனும் கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான யோகா இன்று 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்றார். இதற்கு நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த சீரிய முயற்சியே காரணம் என்றும் அவரின் முயற்சிகளைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது என்றார் அமைச்சர்.


மேலும் நாம் அனைவரும் யோகாவை நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். இதன்மூலம் பெரும்பாலான வாழ்வியல் நோய்களை தடுக்க முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற நோய்களை தடுக்க முடியும் என்று கூறினார். இந்தாண்டுக்கான கருப்பொருளான ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பது நமது வாழ்நாளை அதிகரிக்கவும் நோய்களிலிருந்து காக்கவும் யோகா துணைபுரியும் என்பதை உணர்த்துவதாகும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் தென்மண்டல இயக்குநர் டாக்டர் என். கே. பதக், சென்னை வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர் டாக்டர் சூஷந்தா குமார் கர், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். ராஜேஷ், மத்திய மக்கள் தொடர்பாகத்தின் இயக்குனர் ஜெ காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குனர் சஞ்சய் கோஷ், இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் பல்லவா கமான்டிங் அலுவலர் கேப்டன் பி தினேஷ், கமாண்டர் சிவபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

****
AD/SS/RJ
(रिलीज़ आईडी: 2276068)
आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English