சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனம் அரியலூரில் நகை வியாபாரிகளுக்கான ஹால்மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது
प्रविष्टि तिथि:
20 JUN 2026 7:23PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், 19 ஜூன் 2026 அன்று அரியலூரில் ஹால்மார்க்கிங் குறித்த நகை வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகை வியாபாரிகளிடையே பிஐஎஸ் ஹால்மார்க்கிங் தேவைகள், ஒழுங்குமுறை விதிமுறைகள், இணக்கப் பொறுப்புகள் மற்றும் பிஐஎஸ் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நகை வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் திரு. தயானந்த் அவர்கள் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். இந்திய தரநிலைகள் உருவாக்கம், தயாரிப்பு சான்றளிப்பு, ஹால்மார்க்கிங் மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தரம், பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்வதில் பிஐஎஸ் ஆற்றிவரும் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார்.
ஹால்மார்க்கிங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. S.D. தயானந்த் அவர்கள், தற்போது கட்டாய ஹால்மார்க்கிங் அமல்படுத்தப்படாத மாவட்டங்களான அரியலூர் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த நகை வியாபாரிகளுக்காக இந்நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், “பிஐஎஸ் ஹால்மார்க்கிங் நகைத் துறையில் நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்குவதற்கான முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை வாங்கும் போது, அந்த நகையின் தூய்மை குறித்து நுகர்வோருக்கு நம்பகமான உறுதிப்பாடு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் தகவலறிந்த கொள்முதல் முடிவுகளை எடுக்க முடிகிறது. ஹால்மார்க்கிங் நுகர்வோரை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உண்மையான நகை வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உயர்த்தி, வாடிக்கையாளர் நம்பிக்கையை வலுப்படுத்தி, நியாயமான வணிக நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. தற்போதைய சூழலில் நுகர்வோர் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளையே அதிகம் விரும்புவதால், ஹால்மார்க்கிங் விதிமுறைகளை பின்பற்றுவது நகை வியாபாரிகளுக்கு முக்கியமான வணிக முன்னேற்ற வாய்ப்பாகவும் உள்ளது,” என்றார்.

மேலும், பிஐஎஸ் ஆயுட்கால பதிவு (BIS Lifetime Registration) எந்தக் கட்டணமும் இன்றி வழங்கப்படுவதாகவும், பிஐஎஸ் - இல் பதிவு பெறுவதன் மூலம் நகை வியாபாரிகள் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்யவும், ஹால்மார்க்கிங் அமைப்பில் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஹால்மார்க்கிங் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக பிஐஎஸ் நாடு முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஹால்மார்க் செய்யப்படாத நகைகளை விற்பனை செய்வோர் அல்லது ஹால்மார்க்கிங் குறியீடுகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து நகை வியாபாரிகளும் ஹால்மார்க்கிங் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி, அறிவிக்கப்பட்ட தூய்மைத் தரங்களை உறுதியாக கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப விளக்க உரையை BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு. சாய் சந்திரா அவர்கள் வழங்கினார். ஹால்மார்க்கிங் திட்டத்தின் முக்கிய அம்சங்கள், நகை வியாபாரிகள் பதிவு நடைமுறைகள், HUID அடிப்படையிலான ஹால்மார்க்கிங், இணக்கத் தேவைகள் மற்றும் e-BIS போர்டல் மூலம் கிடைக்கும் டிஜிட்டல் சேவைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு நகை வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஹால்மார்க்கிங் தொடர்பான விழிப்புணர்வை வியாபாரிகளிடையே பரப்புவதில் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பங்கேற்ற நகை வியாபாரிகள் ஹால்மார்க்கிங் விதிமுறைகள், HUID உருவாக்கம், பதிவு செயல்முறைகள், இணக்கத் தேவைகள் மற்றும் பிஐஎஸ் டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக அறிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த நகை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
****
TV/SH
(रिलीज़ आईडी: 2275796)
आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English