சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கோவையில் மின்னணு சாதனங்கள் அசெம்பிளி நிலையத்தில், இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் சோதனை
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUN 2026 7:51PM by PIB Chennai

இந்தியத் தர நிர்ணய அமைவனச் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் செயல் குறித்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர், கோவையில் உள்ள கிரேஸ் லேசர்ஜெட் டெக்னாலஜிஸ் [பிராண்ட் - ஐ பிளஸ்] நிறுவனத்தில் 2026 ஜூன் 17 அன்று சோதனை நடவடிகைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில், விஞ்ஞானி-இ/இயக்குநர் திரு. வினித் குமார் ஜி, விஞ்ஞானி-டி / இணை இயக்குநர் திருமதி. திவ்யா எஸ் மற்றும் விஞ்ஞானி-சி /துணை இயக்குநர் திரு. கௌதம் சந்த் சோனி ஆகிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, பிஐஎஸ் பதிவு இல்லாமல், எல்இடி தொலைக்காட்சிகள், புளூடூத் ஸ்பீக்கர்கள் அந்த நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறியதற்காக, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு மாடல்களைச் சேர்ந்த 24 தொலைக்காட்சிகள் மற்றும் 41 புளூடூத் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் தலைவருமான திரு. ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், இந்த சட்டத்தின் பிரிவு 29-ன் படி, இத்தகையக் குற்றத்திற்கு முதல் முறை விதிமீறலின் போது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தது ரூ. 2 லட்சம் அபராதம் (அல்லது உற்பத்தி செய்யப்பட்ட, விற்கப்பட்ட, விற்பனைக்கு வைக்கப்பட்ட அல்லது தரநிலைக் குறியீடு இடப்பட்ட பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம்) அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். சந்தையில் கிடைக்கும் தொலைக்காட்சிகள் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர்கள் செல்லத்தக்க பிஐஎஸ் பதிவு மற்றும் உண்மையான பதிவு முத்திரையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்படுகின்றனர். பொருட்களை வாங்குவதற்கு முன், தயாரிப்பில் அச்சிடப்பட்ட 'ஆர்-எண்' மூலம் பிஐஎஸ் அமைவனத்தின் செயலியைப் பயன்படுத்தி நுகர்வோர் பதிவின் செல்லத்தக்க தன்மையைச் சரிபார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ் தர முத்திரையை தவறாகப் பயன்படுத்துதல், காலாவதியான உரிமங்களைப் பயன்படுத்துதல் அல்லது பிஐஎஸ் சான்றிதழ் குறித்த தவறான தகவல்களை அளித்தல் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், சட்டப்படி தண்டனைக்குரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வழி வகுக்கும். பிஐஎஸ் அதிகாரிகள் இத்தகைய விதிமீறல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான தயாரிப்புகள் அல்லது ஐஎஸ்ஐ முத்திரையின் முறையற்ற பயன்பாடு குறித்தும், அருகிலுள்ள பிஐஎஸ் அலுவலகத்திலோ அல்லது 'பிஐஎஸ் கேர்' செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது. பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான புகார்களுக்கு, திரு. ரமேஷ் இயக்குநர் மற்றும் தலைவர், பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தில் (0422-2245984) தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2274356)
வருகையாளர் எண்ணிக்கை : 56