சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு நான்கு சர்வதேச ISO சான்றிதழ்களை இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கியது

प्रविष्टि तिथि: 17 JUN 2026 8:08PM by PIB Chennai

 

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு நான்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களை ஒரே நேரத்தில் வழங்கியுள்ளது. தனது 109 ஆண்டுகால சிறப்புமிக்க கல்வி பாரம்பரியத்தில், இவ்வாறு நான்கு ISO மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களை ஒரே நேரத்தில் பெறும் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக ஒஸ்மானியா பல்கலைக்கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஒஸ்மானியா பல்கலைக்கழக செனட் அரங்கில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானி–F மற்றும் தென் மண்டல துணை தலைமை இயக்குனர் திரு. சந்தீப் குமார் கனோஜியா, மூத்த BIS அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்னிலையில் சான்றிதழ்களை வழங்கினார்.

ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள்:

* IS ISO 21001:2018 – கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்பு

* IS ISO 14001:2015 – சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு

* IS ISO 50001:2018 – ஆற்றல் மேலாண்மை அமைப்பு

* IS ISO 22000:2018 – உணவுப் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு

பல்கலைக்கழகத்தின் மேலாண்மை அமைப்புகள் மற்றும் செயல்முறைகள் குறித்த விரிவான மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பிற்குப் பிறகு இச்சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. தரமான கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ஆற்றல் திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதில் ஒஸ்மானியா பல்கலைக்கழகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இச்சாதனை பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சந்தீப் குமார் கனோஜியா, இவ்வரலாற்றுச் சாதனைக்காக ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO சான்றிதழ்கள் கல்வி நிறுவனங்களுக்கு தரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கான கட்டமைக்கப்பட்ட அமைப்பை வழங்குகின்றன. இவை கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு, பங்குதாரர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன. மேலும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் தங்களை ஒப்பிட்டு முன்னேற பல்கலைக்கழகங்களுக்கு உதவுகின்றன. இச்சான்றிதழ்கள் வெறும் அங்கீகாரங்கள் மட்டுமல்ல; நீடித்த சிறப்பையும் எதிர்காலத் தயார்நிலையையும் உறுதிப்படுத்தும் கருவிகளாகும்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், பிஐஎஸ் மேலாண்மை அமைப்பு சான்றளிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் விஞ்ஞானி–E மற்றும் மேலாண்மை அமைப்புகள் சான்றளிப்பு மேற்பார்வை சேவைகள் (தெற்கு) இயக்குனரான திரு. ஜி. வெங்கடநாராயணன் மற்றும் விஞ்ஞானி–E மற்றும் மேலாண்மை அமைப்பு சான்றளிப்பு அதிகாரியான திரு. ராஜ்பால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு.ஜி.வெங்கடநாராயணன், “இச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கு முன் பல்கலைக்கழகத்தின் கொள்கைகள், செயல்பாட்டு நடைமுறைகள், திட்டமிடல், உள்துறை தணிக்கைகள், நிர்வாக மறுஆய்வுகள், திருத்த நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டு செயல்முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடுமையான மற்றும் சுயாதீனமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய தரநிலைகளுடன் தனது கல்வி மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் ஒஸ்மானியா பல்கலைக்கழகம் சிறப்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு ISO சான்றிதழ்களைப் பெறுவது, தரம், நிலைத்தன்மை மற்றும் நிறுவனச் சிறப்பிற்கான வலுவான பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு பெருமைமிக்க சாதனையாகும்” என்றார்.

திரு. ராஜ்பால் தனது உரையில், “BIS வழங்கும் ISO மேலாண்மை அமைப்பு சான்றிதழ்கள், நிறுவனங்களுக்கு நிர்வாக திறனை மேம்படுத்தவும், வளங்களை திறம்பட பயன்படுத்தவும், பங்குதாரர் திருப்தியை உயர்த்தவும் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடையவும் உதவும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளை வழங்குகின்றன. இத்தரநிலைகள் நிலையான வளர்ச்சிக்கும் நீண்டகால செயல்திறன் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமைகின்றன” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குமார் மொலுகரம், இந்த அங்கீகாரத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் குறிப்பிட்டு, “ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கல்விப் பாரம்பரியத்தை பெருமையுடன் தாங்கி நிற்கும் ஒஸ்மானியா பல்கலைக்கழகம், சமகால உலகளாவிய தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதில் உறுதியாக உள்ளது. இச்சான்றிதழ்கள் கல்விசார் சிறப்பு, நிலைத்தன்மை மற்றும் பங்குதாரர் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் குறித்த எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராகவும், உலகளவில் போட்டியிடக்கூடிய கல்வி நிறுவனமாகவும் தொடர்ந்தும் திகழ்வதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துகின்றன” என்றார்.

****

TV/SH


(रिलीज़ आईडी: 2274255) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English