சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026: ஐஐடி மெட்ராஸ், ஐஐடிஎம் குளோபல் அமைப்புகள்-சர்வதேச நிறுவங்களுக்கிடையே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUN 2026 3:07PM by PIB Chennai

இந்தியாவைச் சேர்ந்த ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கும், சர்வதேச கூட்டாண்மை அமைப்புகளுக்கும் இடையே பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடைபெற்று வரும் 'பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026' மாநாட்டின் முதல் நாளில் ஒன்பது முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவற்றில் ஏழு ஒப்பந்தங்கள் வணிக ரீதியாகவும், இரண்டு ஒப்பந்தங்கள் நிறுவன அளவிலானதாகவும் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 

மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு அஜய் சூட் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஐஐடிஎம் குளோபல் நிறுவனம் பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு நிதியத்தை உருவாக்குவதற்காக ஆக்னா கேபிடல் நிறுவனத்துடனும், இந்திய புத்தொழில் நிறுவனங்கள் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சந்தைகளில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் சவுத்வெஸ்ட்எக்ஸ் அமைப்புடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அக்னிகுல் காஸ்மாஸ் நிறுவனம் பின்லாந்து நாட்டின் ஐசிஇஒய்இ, பிரான்ஸ் நாட்டின் சாப்ரான் ஆகிய நிறுவனங்களுடனும், டிடெக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் டோட்டல்எனர்ஜிஸ் நிறுவனத்துடனும், டியூட்டர் ஹைப்பர்லூப் நிறுவனம் தைஸன்க்ரூப் நிறுவனத்துடனும், ஐ-எலக்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆல்டன் நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுவதென இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஹைப்பர்லூப், 5ஜி/6ஜி, துறைமுக ஆட்டோமேஷன், ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்கள், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஆகியவற்றின் மேம்பாடுகளையும் ஐஐடி மெட்ராஸ் காட்சிப்படுத்தியது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி கூறுகையில், பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026 நிகழ்வு இந்தியாவின் ஆழ்தொழில்நுட்பத் துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்திய கண்டுபிடிப்புகள் உலக அரங்கில் முன்னிலை வகிக்கத் தயாராக உள்ளதை நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன” என்றார்.

ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மனு சந்தானம் கூறுகையில், “இந்த ஒப்பந்தங்கள், ஐஐடி மெட்ராஸில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்தொழில்நுட்ப முயற்சிகளுக்குக் கிடைத்த நேரடி பலனாகும் என்றார். பிரான்ஸ், ஐரோப்பாவின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடனான இந்த கூட்டாண்மை நமது முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

ஐஐடிஎம் குளோபல் தலைமைச் செயல் அதிகாரியும் இயக்குநருமான திரு திருமலை மாதவ்நாராயணன் கூறுகையில், “ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, உலகளவில் அடுத்த தலைமுறை ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதில் ஐஐடி மெட்ராஸ் ஒரு நம்பகமான கூட்டாளியாக வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

ஐஐடி மெட்ராஸின் இந்த உலகளாவிய கூட்டாண்மை முயற்சிகள், இந்தியத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சர்வதேச அரங்கில் இடம்பெறுவதை உறுதிசெய்கின்றன.

***

SS/PD/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2273600) வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க: English