சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 5:30PM by PIB Chennai

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்தப்படும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியான ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன ஆழ்தொழில்நுட்ப (டீப் டெக்) கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் மிகச் சிறந்த தொழில்நுட்ப முயற்சிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு வழிகாட்டி, உலகிற்கு அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த கண்காட்சி, இந்திய கண்டுபிடிப்பாளர்களை முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்ப கூட்டாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய உலகளாவிய பார்வையாளர்களுடன் இணைக்கும்.

'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வில் மொத்தமுள்ள 13 கருப்பொருள்களில் இரண்டை சென்னை ஐஐடி வழிநடத்தவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி உருவாக்கிய 15 புத்தொழில் நிறுவனங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

காட்சிப்படுத்தப்படவிருக்கும் இரண்டு கருப்பொருள் பிரிவுகளுக்கு, சென்னை ஐஐடி-ன் கடல்சார் பொறியியல் துறை பேராசிரியரும், துறைமுகங்கள், கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் தலைவருமான பேராசிரியர் கே.முரளி, சென்னை ஐஐடி-யின் மின் பொறியியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணா காந்தி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இக்கருப்பொருள்கள் கடல்சார் பொருளாதாரம், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்' ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருக்கின்றன.

சென்னை ஐஐடி-யின் தொழில்நுட்பங்களுக்கு கிடைத்திருக்கும் உலகளாவிய வாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி பேசுகையில், “இந்தியா-பிரான்ஸ் 2026 கண்டுபிடிப்புகள்’, 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' ஆகியவற்றின் மூலம் சென்னை ஐஐடி, பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறைக்கு இடையே ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6ஜி தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சி, பகிரப்பட்ட சோதனைத் தளங்கள், தரநிலைகள் மேம்பாடு, புத்தொழில் அமைப்புகளில் கூட்டுமுயற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம்  போன்ற வாய்ப்புகளை வழங்குக் கூடிய இந்நிகழ்வில் பங்கேற்பதில் இக்கல்வி நிறுவனம் பெருமகிழ்ச்சி அடைகிறது” என்றார்.

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2270942) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English